சாதி ஒழிப்பின் முதல் படியாக பட்டியல் பிரிவில் இருந்து, தேவேந்திர குல வேளாளர்களை விலக்க வேண்டும் என்று புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்துக் கோவையில் இன்று செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
''தேவேந்திர குல வேளாளர்களைப் பட்டியல் பிரிவில் இருந்து வெளியேற்றம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை நிறைவு செய்யாமல், வெறும் பெயர் மாற்றக் கோரிக்கையை மட்டும் மத்திய அரசு நிறைவேற்றி இருக்கிறது. பட்டியல் பிரிவில் உள்ள 6 சாதிகளை அதிலிருந்து விலக்கிட வேண்டும் என 30 ஆண்டுகளாக வலியுறுத்தி வருகின்றோம். இதுதான் முக்கியக் கோரிக்கை. இல்லாவிட்டால் எவ்விதப் பலனும் கிடைக்காது. சாதி ஒழிப்பின் முதல் படியாக பட்டியல் பிரிவில் இருந்து வெளியேற்றத்தைப் பார்க்கிறோம்.
எனவே, தேவேந்திர குல வேளாளர்களைப் பட்டியல் பிரிவில் இருந்து விலக்க வேண்டும். இதில் எந்தச் சமரசமும் செய்துகொள்ள மாட்டோம். இட ஒதுக்கீட்டைப் பற்றிக் கவலைப்படவில்லை. நெஞ்சில் குத்திய முள்ளை அகற்றாமல் வெறும் சிகிச்சை அளிப்பதால் பலனில்லை. வேளாளர் பெயரைப் பயன்படுத்தக் கூடாது என்று, அந்தச் சமூகத்தினர் சொல்வது சரியானது அல்ல. 56 பிரிவு வேளாளர்கள் உள்ளனர். அதில் நாங்களும் இருக்க விரும்புகிறோம்.
காஸ் பயன்படுத்தினால் மானியம் தருகிறோம் என்றவர்கள், இப்போது மானியத்தைக் குறைவாகக் கொடுக்கின்றனர். பெட்ரோல், டீசல் விலை உயர்வு கட்டுப்பாடு இல்லாமல் போகிறது. இது மற்ற பொருட்களின் விலை உயர்விற்குக் காரணமாக இருக்கிறது. மத்திய அரசு பெட்ரோல், டீசல், காஸ் விலை உயர்வைக் குறைக்க வலியுறுத்தி மார்ச் 1-ம் தேதி தமிழகம் முழுவதும் புதிய தமிழகம் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்.
போராட்டத்தில் ஈடுபட்டு வரும் அங்கன்வாடி ஊழியர்கள், போக்குவரத்து ஊழியர்களின் கோரிக்கைகள் குறித்து அவர்களை அழைத்து, தமிழக அரசு பேச வேண்டும். புதிய தமிழகம் கட்சியின் தேர்தல் நிலைப்பாடு குறித்து மார்ச் மாதம் நடைபெறும் பொதுக்குழுக் கூட்டத்தில் முடிவு செய்வோம்''.
இவ்வாறு டாக்டர் கிருஷ்ணசாமி கூறினார்.