தமிழக சட்டப்பேரவை பிற்பகல் 3 மணிக்குக் கூடுகிறது. தேர்தல் அறிவிப்பை ஒட்டி ஒருநாள் முன்னதாகவே முடிக்கப்படும் என்று தெரிகிறது.
தமிழக சட்டப்பேரவையின் இடைக்கால பட்ஜெட் கூட்டத்தொடர் நாளை வரை நடக்க உள்ளது. பட்ஜெட் குறித்த உறுப்பினர்களின் வாதங்களை அடுத்து துணை முதல்வர் ஓபிஎஸ் பதிலளிக்க உள்ளார். அவர் செலவீனங்களுக்கான அனுமதி பெற உள்ளார். அரசின் சில அறிவிப்புகளும் கடைசி நாள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் தலைமைத் தேர்தல் ஆணையர் இன்று மாலை செய்தியாளர்களைச் சந்திக்க உள்ளார். தமிழகம், புதுவை உள்ளிட்ட 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல் தேதியை அறிவிக்கிறார். தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டால் உடனடியாக தேர்தல் நடத்தை விதிகள் அமலாகும். இதனால் சட்டப்பேரவையை நடத்த முடியாத நிலை ஏற்படும்.
அதனால் சட்டப் பேரவையை இன்றுடன் முடித்துக் கொள்ளலாம் என முடிவெடுக்க உள்ளதாகத் தெரிகிறது. அதற்கான அலுவல் ஆய்வுக் குழு தற்போது சபாநாயகர் தலைமையில் கூடியது. தேர்தல் அறிவிப்பு வர உள்ளதால் இன்று மாலை 3 மணிக்கு மீண்டும் சட்டப்பேரவையைக் கூட்டி இன்று மாலைக்குள் முடித்துவிடுவது என முடிவெடுக்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.