புதுவையில் ஆட்சி கவிழ்ந்ததை அடுத்து அங்கு குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது. இதைக் கண்டித்துள்ள மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், ஜனநாயகத்தை வெட்கப்பட வைக்கும் செயலுக்கு குடியரசு என்று பெயர் என விமர்சித்துள்ளார்.
புதுவையில் காங்கிரஸ்-திமுக கூட்டணி அரசு பெரும்பான்மையுடன் ஆட்சி செய்து வந்தது. துணைநிலை ஆளுநராக கிரண்பேடி நியமிக்கப்பட்டார். கடந்த 4 ஆண்டுகளாக கிரண்பேடிக்கும், ஆளுகின்ற புதுவை அரசுக்கும் மோதல் போக்கு இருந்து வந்தது. கிரண்பேடி அரசு விவகாரத்தில் தலையிடுகிறார் என முதல்வர் நாராயணசாமி தொடர்ந்து விமர்சித்து வந்தார்.
இந்நிலையில் புதிதாக 3 நியமன எம்எல்ஏக்கள் பாஜக சார்பில் நியமிக்கப்பட்டனர். அதையும் அரசு எதிர்த்தது. தொடர்ந்து நடந்து வந்த புதுவை அரசியல் பிரச்சினையில் தேர்தலுக்குச் சில மாதங்களே உள்ள நிலையில், காங்கிரஸ் கட்சியிலிருந்த பல எம்எல்ஏக்கள் முக்கியப் பொறுப்பிலிருந்த நமச்சிவாயம் உள்ளிட்டோர் பாஜகவுக்குத் தாவினர்.
ஆட்சிக்கான பெரும்பான்மை உள்ளது என்றும், சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிப்பதாகவும் நாராயணசாமி கூறிய அன்றே காங்கிரஸ் பேரவை உறுப்பினர் ஒருவரும், திமுக உறுப்பினர் ஒருவரும் ராஜினாமா செய்து நெருக்கடியை ஏற்படுத்தினர்.
இதனிடையே, புதுச்சேரி துணைநிலை ஆளுநராக இருந்த கிரண்பேடியை கடந்த செவ்வாய்க்கிழமை (பிப். 16) இரவு திடீரென்று குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நீக்கி உத்தரவிட்டார். இதையடுத்து, தெலங்கானா மாநில ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனுக்கு புதுவை மாநில துணைநிலை ஆளுநராகக் கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டது.
பின்னர், புதுச்சேரி சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு தீர்மானத்தை முன்மொழிந்து பேசிய நாராயணசாமி, தனது அரசுக்கு எவ்வாறெல்லாம் நெருக்கடி கொடுக்கப்பட்டது, காங்கிரஸ் உறுப்பினர்கள் எப்படி மிரட்டப்பட்டு, ஆசை காட்டப்பட்டு பாஜகவுக்கு இழுக்கப்பட்டனர் என்று பேசினார்.
பின்னர் காங்கிரஸ் அரசு பெரும்பான்மை இழந்ததாக அறிவிக்கப்பட்டது. அதைத் துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், குடியரசுத் தலைவருக்குப் பரிந்துரைத்தார். நேற்று அங்கு குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது. இந்நிலையில் ஆட்சிக் கவிழ்ப்பு ஜனநாயாகத்தை வெட்கப்படவைக்கும் செயலுக்கு குடியரசு என்று பெயர் என கமல்ஹாசன் விமர்சித்துள்ளார்.
இதுகுறித்து ட்விட்டர் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளதாவது:
“மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசைக் கலைத்து புதுவையில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல் செய்திருக்கிறார்கள். ஜனநாயகத்தையே வெட்கப்படவைக்கும் இச்செயலுக்கு, குடியரசு என்ற பெயர் என்ன பொருத்தம்”?
இவ்வாறு கமல்ஹாசன் பதிவிட்டுள்ளார்.