கோப்புப் படம் 
தமிழகம்

தாம்பரம் அருகே நாளை 'உங்கள் தொகுதியில் ஸ்டாலின்' நிகழ்ச்சி: பொதுமக்களுக்கு திமுக எம்எல்ஏ., தா.மோ.அன்பரசன் அழைப்பு

செய்திப்பிரிவு

தாம்பரம் அருகே படப்பை கரசங்காலில் நாளை 27-ம் தேதி ‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ நிகழ்ச்சி நடக்கிறது. இதில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்து கொள்கிறார்.

இந்தக் கூட்டத்தை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளும் வகையில் கட்சியினர் ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு காஞ்சி வடக்கு மாவட்ட திமுக செயலாளரும், ஆலந்தூர் சட்டப்பேரவை தொகுதி உறுப்பினருமான தா.மோ.அன்பரசன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்,‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ என்ற பெயரில், தமிழகம் முழுவதும் தேர்தல் பரப்புரையை மேற்கொண்டு வருகின்றார்.

அதன்படி, தாம்பரம் அருகே படப்பை கரசங்கலில் நாளை 27-ம் தேதி (சனிக்கிழமை) ‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ நிகழ்ச்சி நடத்தப்பட உள்ளது. காலை 8 மணி முதல் மதியம் ஒரு மணி வரை நடக்கும் இந்நிகழ்வில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்து கொள்கிறார்.

இதில் கழகத்தினரும் - பொதுமக்களும் ஆயிரக்கணக்கில் அணி திரண்டு வரும்படி காஞ்சி வடக்கு மாவட்ட திமுக செயலாளரும், ஆலந்தூர் சட்டப்பேரவை தொகுதி உறுப்பினருமான தா.மோ.அன்பரசன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது குறித்து தா.மோ.அன்பரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், "இந்த மாபெரும் வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வை காஞ்சிபுரம் வடக்கு மாவட்டத்திற்குட்பட்ட ஆலந்தூர், திருப்பெரும்புதூர், பல்லாவரம், தாம்பரம், செங்கல்பட்டு, திருப்போரூர் உள்ளிட்ட தொகுதிகளுக்கு உட்பட்ட பொதுமக்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டுகிறேன்.

அதன்படி, மாவட்டத்திற்குட்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்டக் கழக நிர்வாகிகள், தலைமைச் செயற்குழு - பொதுக்குழு உறுப்பினர்கள், நிர்வாகிகள் இந்த நல்வாய்ப்பை பயன்படுத்திக் கொள்வதற்காக அவரவர் பகுதிகளில் உள்ள ஒவ்வொரு வீட்டிற்கும் சென்று இக்கூட்டத்திற்கு அழைத்து விழிப்புணர்வை ஏற்படுத்தி அரசின் மூலம் தீர்வுக் காணக்கூடிய பிரச்சினைகளான சான்றிதழ்கள், பட்டா, ஓய்வூதியம், முதியோர் உதவித் தொகை ஆகியவற்றிக்கான விண்ணப்பங்களை தந்து பெருந்திரளாக பொதுமக்கள் கலந்துகொள்ளும் வகையில்ஏற்பாடுகளை செய்ய வேண்டும்.

பேரறிஞர் அண்ணா பிறந்த காஞ்சிபுரம் மாவட்டத்தில் நடைபெறும் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என்ற நிகழ்ச்சிக்கு மாவட்ட முழுவதும் இருந்து கழகத்தினரும், பொதுமக்களும் கலந்து கொள்ள அழைக்கிறேன்"

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT