தமிழகம்

மழை வெள்ளம் பாதித்த மாவட்டமாக மாநில அரசின் பட்டியலில் திருப்பூரை சேர்க்க வலியுறுத்தல்

செய்திப்பிரிவு

மழை வெள்ளம் பாதித்த மாவட்டமாக மாநில அரசின் பட்டியலில் திருப்பூரை சேர்க்க வேண்டுமென விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.

திருப்பூர் மாவட்ட விவசாயிகள் குறைகேட்புக் கூட்டம், ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் க.விஜயகார்த்திகேயன் தலைமையில் நேற்று நடைபெற்றது. பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் மற்றும் விவசாய சங்கங்கள் சார்பில் கோரிக்கை மனுக்கள் அளிக்கப்பட்டன.

தமிழ்நாடு விவசாயிகள் சங்கம்: தமிழகத்தில் கடந்த ஜனவரி 13-ம் தேதியிலிருந்து 16-ம் தேதி வரை பருவம் தவறி பெய்த மழையால் விவசாயம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மழை வெள்ளம் சேதம் ஏற்பட்டுள்ள மாவட்டங்களின் பட்டியலில் திருப்பூர் மாவட்டம் விடுபட்டுள்ளது, ஆனால், உடுமலை,தாராபுரம், காங்கயம், மடத்துக்குளம் வட்டங்களில் நெற்பயிர் விளையும் தருவாயில், மழை வெள்ளத்தால்ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கர் எந்தவித பயனும் இன்றி நாசமடைந்துள்ளன. இதேபோல, ஆண்டுக்கு ஒரு முறை பயிர் செய்யும் கொண்டைக்கடலை, கொத்துமல்லி பயிர்களும் பெரும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளன. எனவே, மழை வெள்ளம் பாதித்த மாவட்டமாக தமிழக அரசின் பட்டியலில் திருப்பூரை சேர்த்து, பயிர் பாதிப்புகளை கணக்கெடுத்து விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தமிழக கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்கம்: கூட்டுறவு கடன்சங்கத்தில் விவசாயிகள் வாங்கிய பயிர்க்கடனை தமிழக அரசு தள்ளுபடி செய்துள்ளதை வரவேற்கிறோம். மேலும், கூட்டுறவு கடன் சங்கத்தில் விடுபட்ட அனைத்து விவசாயிகளுக்கும் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும். தற்போது, தள்ளுபடி செய்யப்பட்ட அனைத்து விவசாயிகளுக்கும் உடனடியாக பயிர்க்கடன் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கொங்கு நாடு விவசாயிகள் கட்சி: மத்திய அரசின் பவர் கிரிட் நிறுவனம் மற்றும் தமிழ்நாடு மின் தொடர்பு கழகத்தால் நிறுவப்பட்ட உயர் மின் கோபுரங்கள் அமைக்க நிலம், மரங்களுக்கான இழப்பீடு, கோவை மாவட்டத்தில் ஏற்கெனவே முழுமையாக வழங்கப்பட்டுள்ளது. ஆனால், திருப்பூர் மாவட்டத்தில் அதிக இடங்களில் இழப்பீடுவழங்கப்படாமல் உள்ளது. இதனால், விவசாயிகளின் வாழ் வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, திருப்பூர் மாவட்டத்துக்கும் முழுமையாக இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தமிழக விவசாயிகள் சங்கம்: கிராமப்புறங்களில் விவசாயிகள் தங்கள் மருத்துவம் மற்றும் அத்தியாவசிய தேவைக்காக தேசிய வங்கிகளில் வைத்துள்ள வைப்புத்தொகைக்கு, வட்டி மீது 20 சதவீதம் அளவுக்கு வருமான வரி பிடித்தம் செய்கிறார்கள். இச்செயல் மிகப்பெரிய அநீதி. அனைத்து தேசிய வங்கி மண்டல மேலாளர்களையும் அழைத்து பேசி பிடித்தம் செய்த தொகையை மீட்டுத் தர வேண்டும்.

மேலும், திருப்பூர் மாவட்டம் உப்பாறு அணையின் பிரதானகால்வாய்கள் மற்றும் பாசன வாய்க்காலை தூர்வாரிய பிறகு தண்ணீர் திறக்க வேண்டும் என்றும், குடிமங்கலம் வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநர் அலுவலகம் மூலமாகவிவசாயிகளுக்கு சின்ன வெங்காயம் விதைகள் இலவசமாக வழங்கப்பட்டன. இதில், சாகுபடி செய்ய ஆர்வம் உள்ள விவசாயிகள்பலருக்கு விதைகள் கிடைக்கவில்லை. விவசாயிகளுக்கு உரிய விதை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக் கைகளும் முன்வைக்கப்பட்டன.

மாவட்ட வருவாய் அலுவலர் கு.சரவணமூர்த்தி, கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளர் பிரபு மற்றும் அனைத்து துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.

SCROLL FOR NEXT