வடசென்னையில் உள்ள ராயபுரம், திருவொற்றியூர், ஆர்.கே.நகர், எண்ணூர் ஆகிய இடங்களில் உள்ள மீனவ குடியிருப்புகளில் வெள்ளம் புகுந்துள்ளது. இதனால், அவர்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து, ராயபுரத்தில் உள்ள மீனவ மக்கள் கூறியதாவது:
ஒவ்வொரு மழைக்கும் எங்கள் பகுதில் வெள்ளம் சூழ்வது வாடிக்கை. தற்போது பெய்துவரும் இந்த மழைக்கு எங்கள் பகுதியில் உள்ள சிங்காரவேலர் நகர், எம்ஜிஆர் நகர், திருவள்ளுவர் நகர், ஜீவரத்தினம் நகர், நாகூர் தோட்டம், நல்ல தண்ணீர் ஓடை, திருச்சினாங்குப்பம், தாழங்குப்பம், நெட்டிக்குப்பம், திருவொற்றியூர் குப்பம் ஆகிய இடங்களில் உள்ள மீனவ மக்களின் குடியிருப்புகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது.
எனவே, பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இப்பகுதியில் வசிக்கும் சுமார் 1.50 லட்சம் மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். சமூக கூடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளவர்களுக்கு உணவு உள்ளிட்ட நிவாரண உதவிகள் அரசு சார்பில் வழங்கப்பட்டு வருகிறது. மேலும், கடலுக்குள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டதால் மீனவர்கள் யாரும் கடலுக்குள் செல்லவில்லை என்றனர்.