மாணவர்களிடையே உரையாடும் தயாநிதி மாறன். 
தமிழகம்

தமிழகம் 10 ஆண்டுகளாக இருண்டு கிடக்கிறது: தயாநிதி மாறன் குற்றச்சாட்டு

ந. சரவணன்

கடந்த 10 ஆண்டுகளாக எந்த வித வளர்ச்சியும் இல்லாமல் தமிழகம் இருண்டு கிடக்கிறது என, மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் விமர்சித்துள்ளார்.

தமிழகம் முழுவதும் திமுக சார்பில் 'விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல்' என்ற தேர்தல் பிரச்சாரம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அந்த வகையில், திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி சட்டப்பேரவைத் தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு இடங்களில் முன்னாள் மத்திய அமைச்சரும், மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினருமான தயாநிதி மாறன் இன்று (பிப். 25) தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி சட்டப்பேரவைத் தொகுதியில் 'விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல்' என்ற தலைப்பில் தேர்தல் பிரச்சாரத்துக்காக இன்று வந்த மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறனை மாராப்பட்டு பகுதியில் திருப்பத்தூர் மாவட்ட பொறுப்பாளர் தேவராஜ் வரவேற்றார்.

இதையடுத்து, கோணாமேடு பகுதிக்கு வந்த தயாநிதி மாறனுக்கு நகர பொறுப்பாளர் சாரதிகுமார் வரவேற்பு அளித்தார். அதன்பிறகு அங்குள்ள அம்பேத்கர் சிலைக்கு தயாநிதிமாறன் மாலை அணிவித்து தனது பிரச்சாரத்தைத் தொடங்கினார்.

கோணாமேடு பகுதியைச் சேர்ந்த மூத்த நிர்வாகி மணி என்பவர் வீட்டுக்குச் சென்று நலம் விசாரித்தார்.

இதைத்தொடர்ந்து, வாணியம்பாடி நியூ டவுன் பகுதியில் உள்ள இஸ்லாமிய கல்லூரி வளாகத்தில் மாணவர்களிடையே கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பங்கேற்று மாணவர்களிடையே உரையாற்றினார். அப்போது, கல்லூரி மாணவர்கள், "கல்லூரி சார்பில் நடத்தப்படும் வேலைவாய்ப்பு முகாமில் 10 சதவீதம் பேருக்குக்கூட வேலைவாய்ப்பு கிடைப்பதில்லை.

வாணியம்பாடியில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளில் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டும். வேலைவாய்ப்புகளை உறுதி செய்ய வேண்டும். பள்ளி மாணவர்கள் நிறைய பேருக்கு இலவச மடிக்கணினி வழங்கப்படவில்லை. விளையாட்டு வீரர்களுக்கு அரசுப்பணி ஒதுக்கீடு செய்வதில் அரசியல் தலையீடு உள்ளது. பணம் கொடுத்தால் மட்டுமே அரசுப்பணி உறுதி செய்யப்படுகிறது. சீரான சாலை வசதி இல்லை, இதையெல்லாம் சரி செய்ய வேண்டும்" என கோரிக்கை விடுத்தனர்.

இதைத்தொடர்ந்து, மாணவர்களிடம் பேசிய தயாநிதி மாறன், "திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் இக்கல்லூரியின் முன்னாள் மாணவர். இக்கல்லூரிக்கு வருவதில் பெரும் மகிழ்ச்சி. தமிழகத்தில் கடந்த 10 ஆண்டுகளாக வேலைவாய்ப்பு இல்லை. சென்னை முதல் காஞ்சிபுரம் வரை நிறைய தொழிற்சாலைகள் இருந்தாலும் படித்த இளைஞர்களுக்கு அதிமுக அரசு வேலைவாய்ப்பை உருவாக்கித் தரவில்லை.

பிரபல கார் நிறுவனம் உதிரிபாகங்களை தயாரிக்க தமிழகத்தில் தொழிற்சாலை திறக்க அனுமதி கேட்டது. அதிமுக அரசு அதற்கு லஞ்சம் கேட்டதால் அந்த தொழிற்சாலை தற்போது ஆந்திர மாநிலத்துக்கு சென்றுவிட்டது. இதனால், அம்மாநில இளைஞர்கள் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர். புதிய தொழிற்சாலைகளை கொண்டு வர மத்திய, மாநில அரசுகள் முயற்சி ஏதும் செய்யவில்லை.

மத்திய அரசின் திட்டங்களுக்கு தலையாட்டும் அதிமுக அரசு, மாநில உரிமைகளை பறிகொடுத்துவிட்டது. முஸ்லிம்கள், கிறிஸ்தவர்களிடையே பிரிவினையை உண்டாக்கி, இந்துக்களின் வாக்குகளை பெற முயற்சி நடக்கிறது. கரோனாவிலும் மதச்சாயத்தை மத்திய அரசு பூசிவிட்டது. விவசாயிகளின் கோரிக்கையை மத்திய அரசு நிறைவேற்றவில்லை. விவசாயிகள் நலனின் அக்கறை காட்டாத அரசாக மத்திய, மாநில அரசுகள் செயல்பட்டு வருகின்றன.

கடந்த 10 ஆண்டுகளாக தமிழகத்தில் எந்த வளர்ச்சியும் ஏற்படவில்லை. தமிழகம் இருண்டு கிடக்கிறது. இதற்காகத்தான் 'விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல்' என்ற நிகழ்ச்சியை திமுக நடத்தி வருகிறது. விரைவில் ஆட்சி மாற்றம் வரும், தமிழகம் முன்னேற்றப்பாதைக்கு செல்லும்" என்றார்.

இதைத்தொடர்ந்து, வாணியம்பாடி நியூ டவுன் பகுதியில் பல ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டுள்ள ரயில்வே பாலம் அமைக்கும் இடத்தை தயாநிதி மாறன் பார்வையிட்டு பொதுமக்களிடையே குறைகளை கேட்டறிந்தார். இதைத்தொடர்ந்து, ராமநாயக்கன்பேட்டை பகுதியில் ஊதுபத்தி தயாரிக்கும் தொழிற்சாலை மற்றும் தேங்காய் உரிக்கும் தொழிலாளர்களிடம் அவர் கலந்துரையாடினார்.

இதைத்தொடர்ந்து, உதயேந்திரம் பேரூராட்சியில் கிறிஸ்தவ மதபோதகர்களுடன் சந்திப்பு, தனியார் திருமண மண்டபத்தில் முத்தவல்லிகள், தொழில் முனைவோர்களுடன் அவர் கலந்துரையாடினார். அதன்பிறகு, ஆலங்காயம் பகுதியில் கிராம சபைக்கூட்டத்தில் பொதுமக்களுடன் கலந்துரைடியானார். வாணியம்பாடி டவுன் பகுதியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் தயாநிதிமாறன் பங்கேற்று தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். இந்நிகழ்ச்சியில், வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் கதிர்ஆனந்த், திமுக ஒன்றிய, நகர நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

SCROLL FOR NEXT