தமிழகத்தில் 2019-ல் நடைபெற்ற குரூப் 4 தேர்வு முறைகேடு வழக்கின் ஆவணங்களைப் பாதுகாப்பாக வைக்க வேண்டும் என சிபிசிஐடிக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் முகமது ரஸ்வி, உயர் நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்த மனு:
தமிழகத்தில் 2019-ல் நடைபெற்ற டிஎன்பிஎஸ்சி நடத்திய குரூப் 4 தேர்வில் மாநிலம் முழுவதும் 16 லட்சம் பேர் பங்கேற்றனர். இந்தத் தேர்வில் ராமேஸ்வரம் தேர்வு மையத்தில் தேர்வு எழுதியவர்கள் முதல் நூறு இடங்களில் வெற்றி பெற்றனர்.
இந்தத் தேர்வில் முறைகேடு நடைபெற்றுள்ளது.
இது தொடர்பாக சிபிசிஐடி போலீஸார் வழக்குப் பதிவு செய்து பலரைக் கைது செய்தனர். தனிப்படை அமைத்து விசாரித்து வருகின்றனர். சிபிஐ விசாரித்தால் மட்டுமே உண்மைகளை வெளிக்கொண்டு வர முடியும்.
எனவே, குரூப் 4 முறைகேடு தொடர்பான விசாரணையை சிபிசிஐடியிடம் இருந்து சிபிஐக்கு மாற்ற உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு தலைமை நீதிபதி சஞ்சிப் பானர்ஜி, நீதிபதி ஹேமலதா அமர்வில் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் கே.நீலமேகம் வாதிட்டார்.
பின்னர், குரூப் 4 முறைகேடு தொடர்பாக சிபிசிஐடி போலீஸார் கைப்பற்றிய ஆவணங்களை பாதுகாப்பாக வைக்க வேண்டும். இது தொடர்பாக தலைமைச் செயலர் பதில் மனு தாக்கல் செய்யவும் உத்தரவிட்டு விசாரணையை 4 வாரங்களுக்கு ஒத்திவைத்தது.