கனிமொழி மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்றதற்கு எதிராக தமிழிசை சவுந்தரராஜன் தொடர்ந்த தேர்தல் வழக்கில் உச்ச நீதிமன்றத்தில் மற்றொரு வழக்கிற்கு விதிக்கப்பட்ட தடையைக் காரணம் காட்டி 3 வாரங்களுக்கு வழக்கை ஒத்திவைத்தது உயர் நீதிமன்றம்.
கடந்த 2019-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் தூத்துக்குடி தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட கனிமொழி வெற்றி பெற்றார். அவர் வெற்றி பெற்றது செல்லாது என அறிவிக்கக் கோரி அந்தத் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்ட தமிழிசை சவுந்தரராஜன், அத்தொகுதி வாக்காளர் சந்தானகுமார் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தனர்.
தமிழிசை சவுந்தரராஜன், தெலங்கானா மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டதால், அவருக்கு பதிலாக தேர்தல் வழக்கை தொடர்ந்து நடத்த ஸ்ரீவைகுண்டத்தைச் சேர்ந்த பாஜக நிர்வாகி முத்துராமலிங்கம் என்பவருக்கு உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியது.
உச்ச நீதிமன்றத்தில் கனிமொழி தொடர்ந்த வழக்கில், வாக்காளர் சந்தானகுமார் தொடர்ந்த வழக்கிற்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிடப்பட்டது. இந்நிலையில், இந்த வழக்குகள் உயர் நீதிமன்ற நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் முன் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தன.
வழக்குகளை விசாரித்த நீதிபதி, உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கைச் சுட்டிக்காட்டி, கனிமொழிக்கு எதிரான இரு தேர்தல் வழக்குகளின் விசாரணையையும், மூன்று வாரங்களுக்குத் தள்ளிவைத்தார்.