போக்குவரத்துக் கழக ஊழியர்களை அழைத்துப் பேசி தமிழக அரசு உரிய தீர்வு காண வேண்டும் என, அமமுக பொதுச் செயலாளரும் சட்டப்பேரவை உறுப்பினருமான டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.
தமிழக அரசுக்குச் சொந்தமான 8 போக்குவரத்துக் கழகங்களில் மொத்தம் 1.30 லட்சம் பேர் பணியாற்றி வருகின்றனர். இதற்குத் தேவையான நிதியை பட்ஜெட்டில் ஒதுக்க வேண்டும், தொழிலாளர்களின் சேமிப்புப் பணத்தை நிர்வாகம் செலவிடுவதைத் தவிர்க்க வேண்டுமென தொழிற்சங்கங்கள் வலியுறுத்தி வருகின்றன
இதற்கிடையே, அரசு போக்குவரத்துக் கழகங்களுக்கு உரிய நிதி வழங்குவது, மற்ற துறை ஊழியர்களுக்கு இணையான ஊதியம் வழங்குவது, ஓய்வுபெற்ற ஊழியர்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பது, புதிய ஊதிய ஒப்பந்தத்தை இறுதி செய்வது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று (பிப். 25) அதிகாலை முதல் தொமுச, சிஐடியு, ஏஐடியுசி, ஐஎன்டியுசி உள்ளிட்ட 9 சங்கங்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளன.
இது தொடர்பாக, அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் இன்று தன் ட்விட்டர் பக்கத்தில், "14-வது ஊதிய ஒப்பந்தத்தைச் செயல்படுத்துதல், ஓய்வுபெற்ற தொழிலாளர்களுக்கான நிலுவைத் தொகை வழங்குதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள அரசுப் போக்குவரத்துக் கழக ஊழியர்களை அழைத்துப் பேசி தமிழக அரசு உரிய தீர்வு காண வேண்டும்.
அதை விட்டுவிட்டு வெளியிலிருந்து அனுபவமில்லாத தற்காலிக ஊழியர்களைக் கொண்டு பேருந்துகளை இயக்கி பொதுமக்களின் உயிரோடு விளையாடக் கூடாது. எனவே, தமிழக அரசு உடனடியாக இப்பிரச்சினைக்குத் தீர்வு காண வேண்டும் என வலியுறுத்துகிறேன்" எனப் பதிவிட்டுள்ளார்.