வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களின் நியாயமான கோரிக்கைகளுக்குத் தீர்வு காண்பதற்கு பதிலாக, தமிழக அரசு போராட்டத்தில் ஈடுபடும் தொழிலாளர்களுக்குச் சம்பள வெட்டு, துறை ரீதியான நடவடிக்கை எனக் கடுமையான அடக்குமுறைகளைக் கட்டவிழ்த்து விடுவது மேலும் போராட்டத்தைத் தீவிரப்படுத்தும் என கே.பாலகிருஷ்ணன் எச்சரித்துள்ளார்.
இதுகுறித்து கே.பாலகிருஷ்ணன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை:
“போக்குவரத்து ஊழியர்களுக்கு 19 மாத காலமாக நிலுவையில் உள்ள ஊதிய ஒப்பந்தப் பேச்சுவார்த்தையை உடனடியாக நடத்தித் தீர்வு காண வேண்டும், ஓய்வுபெற்ற போக்குவரத்து ஊழியர்களுக்கு 5 வருட காலமாக வழங்க வேண்டிய பஞ்சப் படியையும், ஓய்வூதிய காலப் பலன்களையும் உடனடியாக வழங்கிட வேண்டும்.
தொழிலாளர்களுக்குரிய 8,000 கோடி ரூபாய் பணத்தை எடுத்துச் செலவு செய்த தமிழக அரசு, அந்தத் தொகையை மீண்டும் அவரவர் கணக்கில் செலுத்த வேண்டுமென்றும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 1 1/2 ஆண்டு காலமாகப் போக்குவரத்து தொழிலாளர்கள் பல்வேறு கட்ட இயக்கங்களை நடத்தி வருகின்றனர்.
இதைத் தமிழக அரசு அலட்சியம் செய்த காரணத்தினால் தொழிலாளர்கள் இன்றிலிருந்து (பிப்.25) காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் இறங்கியுள்ளனர். வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களின் நியாயமான கோரிக்கைகளுக்குத் தீர்வு காண்பதற்கு பதிலாக, தமிழக அரசு போராட்டத்தில் ஈடுபடும் தொழிலாளர்களுக்குச் சம்பள வெட்டு, துறை ரீதியான நடவடிக்கை எனக் கடுமையான அடக்குமுறைகளைக் கட்டவிழ்த்துவிட்டுள்ளது.
இந்நடவடிக்கை போராட்டத்தை மேலும் தீவிரப்படுத்துவதற்கே வழிவகுக்குமே தவிர, சுமுகத் தீர்வு காண்பதற்கு உதவாது என்பதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சுட்டிக்காட்ட விரும்புகிறது. எனவே, ஏழை, எளிய மக்களுக்காகச் சேவைபுரியும் போக்குவரத்து தொழிலாளர்களின் நியாயமான கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றித் தர வேண்டும்.
போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அனைத்துச் சங்கத் தலைவர்களையும் உடனடியாக அழைத்துப் பேச்சுவார்த்தை நடத்தி சுமுகத் தீர்வு காண வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தமிழக அரசை வலியுறுத்துகிறது”.
இவ்வாறு கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.