தமிழகம்

தேச வளர்ச்சியில் தமிழ்நாட்டின் பங்களிப்பு குறித்து இந்தியா பெருமை கொள்கிறது: பிரதமர் மோடி தமிழில் ட்வீட்

செய்திப்பிரிவு

தேச வளர்ச்சியில் தமிழ்நாட்டின் பங்களிப்பு குறித்து இந்தியா பெருமை கொள்கிறது என பிரதமர் மோடி தமிழில் ட்வீட் செய்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "தேச வளர்ச்சிக்கு தமிழ் நாட்டின் பங்களிப்பு குறித்து இந்தியா பெருமை கொள்கிறது.

தமிழர்களின் துடிப்பான பண்பாடு உலக அளவில் புகழ் பெற்றது. தமிழ் நாட்டின் வளர்ச்சிக்கு உழைப்பதில் மத்திய அரசு பெருமைப் படுகிறது. பல்வேறு திட்டங்களைத் தொடங்கி வைப்பதற்காக நாளை கோயம்புத்தூரில் இருப்பேன்" என தமிழில் பதிவிட்டுள்ளார்.

இதேபோல், புதுச்சேரிக்கு வருவது தொடர்பாக, "புதுச்சேரி செழுமையான வரலாற்றின் கூடாரம். துடிப்பான கலாச்சாரமும் அற்புதமான மக்களும் கொண்ட நகரம். நாளை நான் புதுச்சேரியி பல்வேறு நலத்திட்டங்களைத் தொடங்கிவைக்க வருகிறேன்" எனப் பதிவிட்டுள்ளார்.
பிரதமரின் பயணத் திட்டம்:

பிரதமர் நரேந்திர மோடி ஒருநாள் பயணமாக இன்று புதுச்சேரி, கோவை வருகிறார். அரசு திட்டங்கள் தொடக்க விழா, அடிக்கல் நாட்டு விழாவில் பங்கேற்கும் அவர் புதுச்சேரி, கோவையில் நடைபெறும் பாஜக பிரச்சாரப் பொதுக்கூட்டங்களிலும் பேசுகிறார்.

சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கும் நிலையில் கடந்த14-ம் தேதி சென்னை வந்த பிரதமர் மோடி, சென்னை மெட்ரோ ரயில் விரிவாக்கம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்தார். அதன் தொடர்ச்சியாக இன்று மீண்டும் தமிழகம் வருகிறார்.

இதற்காக டெல்லியில் இருந்து இன்று 7.45 மணிக்கு புறப்பட்டு காலை 10.25 மணிக்கு சென்னை விமான நிலையம் வருகிறார். ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், முதல்வர் பழனிசாமி உள்ளிட்டோர் அவரை வரவேற்கின்றனர். பின்னர், அங்கிருந்து ஹெலிகாப்டரில் காலை 11.20 மணிக்கு புதுச்சேரி செல்கிறார்.

புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் உள்ளிட்டோர் அவரை வரவேற்கின்றனர். அங்கிருந்து கார் மூலம்ஜிப்மர் மருத்துவமனை கருத்தரங்கு கூடத்துக்குச் செல்கிறார்.

அங்கு நடைபெறும் அரசு விழாவில் விழுப்புரம் - நாகப்பட்டினம் இடையில் ரூ.2 ஆயிரம் கோடியில் அமைக்கும் 4 வழிப்பாதை, சீர்காழி சட்டநாதபுரம் முதல் நாகப்பட்டினம் வரையிலான 56 கி.மீ சாலை பணி, காரைக்காலில் ரூ.491 கோடியில் ஜிப்மர் கிளை மருத்துவமனை கட்டிடப் பணிகளை தொடங்கி வைக்கிறார்.

அதனைத் தொடர்ந்து பகல் 12 மணிக்கு லாஸ்பேட்டையில் நடைபெறும் பாஜக பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் மோடி பேசுகிறார்.

இரு நிகழ்ச்சிகளையும் முடித்துக் கொண்டு பகல் 1.20 மணிக்கு ஹெலிகாப்டரில் புறப்படும் மோடி 2.10 மணிக்கு சென்னை விமான நிலையம் திரும்புகிறார். அங்கிருந்து தனி விமானம் மூலம் மாலை 3.35 மணிக்கு கோவை சென்றடைகிறார்.

பின்னர் காரில் கொடீசியா வளாகத்தில் மாலை 3.50 மணிக்கு நடைபெறும் அரசு விழாவில் பல்வேறு திட்டங்களைத் தொடங்கிவைக்கிறார்.

அரசு விழா முடிந்ததும் மாலை 5 மணிக்கு கொடீசியா மைதானத்தில் நடைபெறும் பாஜக பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் பங்கேற்கிறார். கோவை நிகழ்வுகளை முடித்துக் கொண்டு மாலை 6 மணிக்கு கோவை விமான நிலையம் வந்தடையும் அவர், 9.15 மணிக்கு டெல்லி சென்றடைகிறார்.

SCROLL FOR NEXT