சென்னை உயர் நீதிமன்றப் பாது காப்பில் ஈடுபட்டுள்ள மத்திய தொழிலகப் பாதுகாப்புப் படை யினரை (சிஐஎஸ்எப்) பணி செய்ய விடாமல் தடுத்ததாக, 8 பேர் வழக்கறிஞர் தொழில் செய்ய தடை விதித்து தமிழ்நாடு பார் கவுன்சில் நேற்று உத்தரவிட்டது.
இதுதொடர்பாக தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் தலைவர் டி.செல்வம் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறி யிருப்பதாவது:-
சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து தொடர்ந்த வழக்கில் உயர் நீதிமன்றத்துக்கு மத்திய தொழில் பாதுகாப்புப் படை பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டது. இதனை உச்ச நீதிமன்றமும் உறுதி செய்தது. அதையடுத்து கடந்த 16-ம் தேதி முதல் உயர் நீதிமன்ற பாதுகாப்பு மத்திய தொழிலகப் பாதுகாப்புப் படையிடம் ஒப்படைக்கப்பட்டது.
இந்த நிலையில், வழக்கறிஞர் கள் ஏ.அப்துல் ரஹ்மான்,ஆர்.பிரசாத், ஒய்.ஜார்ஜ் வில்லியம்ஸ், யு.ராஜராஜன், எல்.இன்பேன்ட் தினேஷ், கே.சத்தியபால், கே.முத்துராமலிங்கம், வி.கயல்விழி ஆகிய 8 பேர் கடந்த 20-ம் தேதி சிஐஎஸ்எப் போலீஸார் பணிக்கு இடையூறு செய்ததுடன், அவர்களது பொருட்களையும் சேதப்படுத்தினர். மேலும், உயர் நீதிமன்ற வளாகத்தைவிட்டு போகும்படியும் மிரட்டியுள்ளனர்.
இதுகுறித்து சிஐஎஸ்எப் கமாண்டன்ட் உயர் நீதிமன்ற தலைமைப் பதிவாளரிடம் புகார் கொடுத்தார். அதனை தமிழ்நாடு பார் கவுன்சிலுக்கு தலைமைப் பதிவாளர் அனுப்பி வைத்தார். இதற்கிடையே, சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள காவல் நிலையத்திலும் சிஐஎஸ்எப் கமாண்டன்ட் புகார் கொடுத்தார். அதன்பேரில் வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த வழக்கறிஞர்கள் மீது கடும் நடவடிக்கை எடுப்பதுடன் ஒழுங்கு நடவடிக்கையும் எடுக்கும்படி அகில இந்திய பார் கவுன்சில் தமிழ்நாடு பார் கவுன்சிலுக்கு உத்தரவிட்டது. இதுபோன்ற செயல்கள் இனிமேலும் நடக்காமல் இருப்பதற்காக தமிழ்நாடு பார் கவுன்சில் நடவடிக்கை எடுக்க வேண்டியது கடமை. பொதுமக்கள் நலனுக்காகவும், நீதித்துறையின் மாண்பை காப்பாற்றுவதற்காகவும் கடும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இந்த வழக்கறிஞர்கள் மீதான ஒழுங்கு நடவடிக்கை முடியும் வரை இந்த 8 வழக்கறிஞர்களும், அனைத்து நீதிமன்றங்கள், தீர்ப்பாயங்கள் ஆகியவற்றில் வழக்கறிஞர் தொழில் செய்ய தடை விதிக்கப்படுகிறது. இவர்கள் மீதான புகாரை விசாரிப்பதற்காக ஒழுங்கு நடவடிக்கை குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழுவின் முதல் கூட்டம் டிசம்பர் 12-ம் தேதி நடக்கிறது.
இவ்வாறு செய்திக்குறிப்பில் டி.செல்வம் கூறியுள்ளார்.