திருவண்ணாமலை அண்ணா மலையார் கோயிலில் கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு தங்கக் கொடிமரத்தில் நேற்று கொடி யேற்றம் நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
திருவண்ணாமலை அண்ணா மலையார் கோயிலில் கார்த்திகை தீபத் திருவிழா, துர்க்கையம்மன் உற்சவத்துடன் கடந்த 13-ம் தேதி இரவு தொடங்கியது. இதை யடுத்து பிடாரி அம்மன் மற்றும் விநாயகர் உற்சவம் நடை பெற்றது. இதையடுத்து, அண்ணா மலையார் கோயிலில் உள்ள 63 அடி உயரம் உள்ள தங்கக் கொடிமரத்தில் நேற்று காலை கொடியேற்றப்பட்டது.
பஞ்சமி திதியில் பூராடம் நட்சத்திரத்தில் காலை 6.52 மணிக்கு கொடியேற்றப்பட்டது. முன்னதாக அண்ணாமலையார், உண்ணாமுலை அம்மன் மற்றும் கொடிமரத்துக்கு சிறப்பு அபி ஷேகம் மற்றும் மகா தீபாராதனை நடந்தது. கார்த்திகை தீபத் திருவிழா கொடியேற்றத்தை ஆயிரக் கணக்கான பக்தர்கள், அண்ணா மலையாருக்கு அரோகரா என்று முழக்கமிட்டு தரிசனம் செய்தனர்.
கொடியேற்றத்தைத் தொடர்ந்து 10 நாட்கள் உற்சவம் தொடங்கியது. முதல் நாளான நேற்று காலையில் கண்ணாடி விமானத்திலும் இரவில் மூஷிகம், மயில், வெள்ளி அதிகார நந்தி, ஹம்சம், சிம்ம வாகனங்களில் பஞ்சமூர்த்திகள் மாட வீதியில் வலம் வந்தனர். 6-ம் நாளான 21-ம் தேதி இரவு வெள்ளித் தேரோட்டமும், 7-ம் நாளான 22-ம் தேதி காலையில் தொடங்கி நள்ளிரவு வரை மகா தேரோட்டமும் நடைபெறும்.
விழாவின் முக்கிய நிகழ்வாக அண்ணாமலையார் கோயிலில் 25-ம் தேதி காலை பரணி தீபமும், அன்று மாலை 6 மணிக்கு அண்ணா மலை உச்சியில் மகா தீபமும் ஏற்றப் படுகிறது. 26-ம் தேதி, உண்ணா முலையுடன் அண்ணாமலையார் கிரிவலம் வருகிறார் அதன்பிறகு, அய்யங்குளத்தில் தொடர்ந்து 3 நாட்களுக்கு தெப்ப உற்சவம் நடைபெறும். சண்டிகேஸ்வரர் உற்சவத்துடன் 29-ம் தேதி இரவு விழா நிறைவுபெறுகிறது.