சமூக வலைதளங்கள் பெண் குழந்தைகளுக்கு மிகப் பெரிய சவாலாக மாறியுள்ளன என்றும், இதில் அதிக நேரம் செலவிட்டு அடைய வேண்டிய இலக்கை மறந்துவிடக் கூடாது என்றும் மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி தெரிவித்தார்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்த நாள் விழாவையொட்டி ‘மாநில பெண் குழந்தைகள் பாதுகாப்பு தினம்’ கொண்டாடப்பட்டது. இதன் ஒரு பகுதியாக காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பெண் குழந்தைகள் பாதுகாப்பு உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இந்த விழாவில் பங்கேற்று மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி பேசியது:
பெண்கள் 18 வயதுக்குப் பிறகுதான் அவர்கள் மனரீதியாகவும், உடல்ரீதியாகவும் திருமணத்துக்கு தயாராகின்றனர். அதனால் அரசு அதை வலியுறுத்தி வருகிறது. 18 வயதுக்கு உட்பட்ட பெண் குழந்தைகளுக்கு திருமணம் நடைபெற்றால் 1098 என்ற எண்ணுக்கு தெரிவிக்கலாம்.
எங்கள் காலத்தில் இல்லாத சவால் இப்போது பெண் குழந்தைகளுக்கு சமூக வலைதங்கள் மூலம் ஏற்பட்டுள்ளது. அதில் அதிக நேரத்தை சிலர் செலவு செய்து அடைய வேண்டிய இலக்கை மறந்து விடக் கூடாது. தேவையற்ற சச்சரிவுகளிலும் சிக்கக் கூடாது. சமூக வலைதளங்கள் விவகாரத்தில் பெண்கள் கவனமுடன் இருக்க வேண்டும் என்றார்.
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சண்முகப்பிரியா பேசும்போது, “மாணவிகள் சமூக வலைதளங்களில் தங்களின் தனிப்பட்ட விவரங்களை பகிர்வதால் பல்வேறு பிரச்சினைகள் ஏற்படுகின்றன. இதில் மாணவிகள் கவனமுடன் செயல்பட வேண்டும்” என்றார்.
இந்த விழாவில் 52 பெண் குழந்தைகளுக்கு உதவித்தொகைவழங்கப்பட்டது. மேலும் பெண் குழந்தைகள் பாதுகாப்பு குறித்து பல்வேறு மாணவிகள் வரைந்த ஓவியங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டன. அதில் சிறந்த ஓவியங்களை வரைந்த மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. இதைத் தொடர்ந்து இரு சக்கர வாகனப் பேரணியும் நடைபெற்றது.
இதேபோல் செங்கல்பட்டு மாவட்டத்தில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு சார்பில் பெண் குழந்தைகள் பாதுகாப்பு தினம் கொண்டாடப்பட்டது. இதில் பெண் குழந்தைகளுக்கு, விழிப்புணர்வுடன் இருப்பது குறித்து விளக்கப்பட்டன.
திருவள்ளூர் மாவட்டத்தில் பெண் குழந்தைகள் பாதுகாப்பு தினத்தையொட்டி மாவட்ட ஆட்சியர் பா.பொன்னையா தலைமையில் அரசு அலுவலர்கள் உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர். அனைத்து ஊராட்சி ஒன்றியங்களிலும் பெண் குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன.
இந்த உறுதியேற்பு நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அவலர் வெ.முத்துசாமி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமைத் திட்ட இயக்குநர் லோகநாயகி, மாவட்ட சமூக நல அலுவலர் (பொ) ராஜராஜேஸ்வரி உட்பட பலர் பங்கேற்றனர்.