திருவாரூரில் ரூ.10 ஆயிரம் லஞ்சம் பெற்றதாக நன்னிலம் வட்டாட்சியர், ஜீப் ஓட்டுநரையும், பொறையாறில் ரூ.20 ஆயிரம் லஞ்சம் பெற்றதாக கோட்டாட்சியரின் நேர்முக உதவியாளரையும் போலீஸார் நேற்று கைது செய்தனர்.
திருவாரூர் மாவட்டம் நன்னிலம் வட்டாட்சியராக பணியாற்றி வருபவர் லட்சுமிபிரபா(49). இவர், நேற்று முன்தினம் மாலை பேரளம் பகுதியில் எம்.சாண்ட் மணல் ஏற்றி வந்த லாரியை வழிமறித்து, அதிக எடை இருப்பதாகக் கூறி லாரியை விட மறுத்ததுடன், அதை ஓட்டிவந்த லாரி உரிமையாளர் குமாரிடம் ரூ.10 ஆயிரம் லஞ்சம் கேட்டதாகக் கூறப்படுகிறது. அப்போது. தன்னிடம் பணம் இல்லை என குமார் தெரிவித்ததால், லாரியின் சாவியை எடுத்துக்கொண்ட லட்சுமி பிரபா, மறுநாள் தன்னை சந்தித்து பணத்தைக் கொடுத்துவிட்டு, லாரி சாவியை பெற்றுச் செல்லுமாறு கூறிவிட்டுச் சென்றுள்ளார்.
இதுகுறித்து திருவாரூர் லஞ்ச ஒழிப்பு போலீஸாரிடம் குமார் புகார் தெரிவித்தார். பின்னர், லஞ்ச ஒழிப்பு போலீஸாரின் அறிவுரைப்படி, நேற்று முற்பகல் 11 மணியளவில் லட்சுமிபிரபாவை குமார் தொடர்புகொண்டு, பணத்தை எங்கு கொண்டுவந்து தரவேண்டும் எனக் கேட்டார். அதற்கு, தான் திருவாரூர் தபால் நிலையத்தில் இருப்பதாகவும், அங்கு வந்து பணத்தை தரும்படி யும் லட்சுமிபிரபா கூறியுள்ளார்.
இதைத்தொடர்ந்து, திருவாரூர் தபால் நிலையத்துக்குச் சென்ற குமாரிடம் இருந்து ரசாயன பவுடர் தடவிய ரூபாய் நோட்டுகளை லட்சுமிபிரபா பெற்றுக் கொண்ட போது, அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீஸார், லட்சுமி பிரபாவை கைது செய்தனர். மேலும், இதற்கு உடந்தையாக இருந்த ஜீப் ஓட்டுநர் லெனின்(35) என்பரையும் கைது செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோட்டாட்சியரின் உதவியாளர் கைது
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி வட்டம் பொறை யாறு பார்வதி அம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் மனோ கரன்(57). இவர், தன்னுடைய காலிமனைக்கு பட்டா கேட்டு, தரங்கம்பாடி வட்டாட்சியர் அலுவலகத்தில் விண்ணப்பித்தார். வட்டாட்சியர் மற்றும் மயிலாடு துறை கோட்டாட்சியர் ஆகியோர் பட்டா மாறுதலுக்கான உத்தரவைப் பிறப்பித்தனர். அந்த உத்தரவு நகலை குமாருக்கு வழங்க, கோட் டாட்சியரின் நேர்முக உதவியாளர் மலர்விழி(57) ரூ.20 ஆயிரம் லஞ் சம் கேட்டதாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து நாகை லஞ்ச ஒழிப்பு போலீஸாரிடம் மனோகரன் புகார் அளித்தார். இதையடுத்து, போலீஸாரின் அறிவுரைப்படி, பொறையாறு சிவன் வடக்கு வீதியில் உள்ள மலர்விழியின் வீட்டுக்கு நேற்று சென்ற மனோகரன், அங்கு ரசாயன பவுடர் தடவிய ரூபாய் நோட்டுகளை மலர்விழியிடம் கொடுத்தார். அதை மலர்விழி வாங்கியபோது, மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு பிரிவு டிஎஸ்பி நந்தகோபால், இன்ஸ்பெக்டர்கள் ரமேஷ்குமார், அருள்பிரியா மற்றும் போலீஸார், மலர்விழியை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். மேலும், அவரது கைப்பையில் வைத்திருந்த கணக்கில் வராத ரூ.30 ஆயிரம் பணம், பட்டா நகல் ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனர்.w