தென்காசியில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் கலந்துகொண்ட விவசாயிகள் மற்றும் பல்வேறு துறை அலுவலர்கள். (வலது)கூட்டத்தில் ஆட்சியர் சமீரன் பேசினார். 
தமிழகம்

தென்காசி மாவட்டத்தில் தொடர் மழையால் பாதிக்கப்பட்ட 21,721 விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கல்: கணக்கெடுப்பில் விடுபட்டவர்களுக்கும் விரைவில் நிதி

செய்திப்பிரிவு

தென்காசி மாவட்டத்தில் மழையால் பாதிக்கப்பட்ட 21,721 விவசாயிகளுக்கு ரூ.21.81 கோடி நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது என்று, குறைதீர் கூட்டத்தில் வேளாண் அதிகாரி தெரிவித்தார்.

தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர் கூட்டம், ஆட்சியர் சமீரன் தலைமையில் நேற்று நடைபெற்றது.

நெல்லுக்கு கட்டாய வசூல்

விவசாயிகள் பேசும்போது, “அனைத்து நீர்நிலைகளிலும் சர்வே செய்து, ஆக்கிரமிப்புகளை அகற்றி, எல்லைக் கல் நட வேண்டும். அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களுக்கு விவசாயிகள் கொண்டு செல்லும் நெல்லுக்கு ஏற்றுக் கூலி, இறக்கு கூலி, லாரி வாடகை என ஒரு கிலோ நெல்லுக்கு ரூ.1 முதல் 1.50 வரை விவசாயிகளிடம் கட்டாய வசூல் செய்கின்றனர். இந்த செலவுகள் அனைத்தையும் அரசே ஏற்க வேண்டும்.

விவசாயிகளிடம் பணம் வசூல் செய்வதை கைவிட வேண்டும். சில இடங்களில் மழையால் நெல் நிறம் மாறியுள்ளது. நெல் கொள்முதல் நிலையங்களில் அதுபோன்ற நெல்லை கொள்முதல் செய்ய மறுக்கிறார்கள். மழையால் பாதிக்கப்பட்ட நெல்லையும் கொள்முதல் செய்ய வேண்டும். யானைகளால் ஏற்பட்ட பயிர்ச்சேதத்துக்கு இழப்பீடு வழங்க வேண்டும்.

தென்காசி மாவட்டத்துக்கு மாவட்ட வன அலுவலகம், மாவட்ட வன அலுவலர் நியமிக்க வேண்டும். சங்கரன்கோவில் மகேந்திரவாடி கூட்டுறவு சங்கம் உட்பட சில கூட்டுறவு சங்கங்களில் விவசாயிகளின் நகைக்கடன்கள் தள்ளுபடி செய்யப்படவில்லை” என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர்.

கூட்டத்தில் கலந்துகொண்ட ஆட்சியர் பேசும்போது, “காலம் தவறி வடகிழக்குப் பருவமழை பெய்ததால் விவசாயிகளுக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டது. பாதிப்புகள் குறித்து அரசின் கவனத்துக்கு கொண்டுசென்று, இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது” என்றார்.

90 சதவீதம் அதிக மழை

ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) பாலசுப்பிரமணியன் பேசும்போது, “தென்காசி மாவட்டத்தில் ஆண்டு சராசரி மழையளவு 817 மிமீ. பிப்ரவரி மாதம் வரை கிடைக்கும் இயல்பான மழை அளவு 80 மிமீ. நடப்பாண்டில் பிப்ரவரி 24-ம் தேதி வரை 153 மி.மீ. மழை பெய்துள்ளது. இது, இயல்பான அளவை விட 90 சதவீதம் அதிகம்.

மழை நிவாரணம் ரூ. 22 கோடி

நெல் விதைகள் 360 டன் விநியோகம் செய்யப்பட்டது. 86 டன் கையிருப்பு உள்ளது. பயறு வகை விதைகள் 184 டன் விநியோகம் செய்யப்பட்டது. 3 டன் கையிருப்பு உள்ளது. எண்ணெய் வித்துகள் 25 டன் விநியோகம் செய்யப்பட்டுள்ளது.

யூரியா 5,964 கிலோ, டிஏபி 1,216 கிலோ உட்பட அனைத்து உரங்களும் போதுமான அளவு கையிருப்பு உள்ளது.

பொங்கல் பண்டிகையை யொட்டி ஏற்பட்ட கனமழையால் நெல், உளுந்து, பாசிப்பயறு போன்ற பயிர்கள் சேதமடைந்தன. இதை வருவாய்த் துறை வேளாண் துறை கணக்கெடுத்தது. இதில், 26,312 விவசாயிகளுக்கு 24,615.85 ஹெக்டேர் பரப்பளவில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதுவரை, 21,721 விவசாயிகளுக்கு ரூ.21.81 கோடி 3 தவணைகளாக செலுத்தப் பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட எந்த விவசாயிகளும் விடுபட்டுவிடக் கூடாது என்பதுதான் அரசின் எண்ணம். கணக்கெடுப்பில் விடுபட்ட பாதிப்பு அறிக்கை குறித்த விவரங்கள் 2 கட்டங்களாக அனுப்பப்பட்டுள்ளது. அதற்கும் விரைவில் நிவாரணம் கிடைக்கும்” என்றார்.

SCROLL FOR NEXT