உணவு பழக்கங்களை முறையாக கடைபிடித்தால் புற்று நோயிலிருந்து தப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் தெரிவித்தார்.
உலக புற்று நோய் தினத்தை முன்னிட்டு அகில இந்திய அறுவை சிகிச்சை மருத்துவர்கள் சங்கம் சார்பில், காவல் துறையில் பணியாற்றி வரும் பெண் அதிகாரிகளுக்கான புற்று நோய் குறித்த சிறப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி வேலூர் விஐடி பல்கலைக்கழகத்தில் நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சியில், வேலூர் சரக டிஐஜி காமினி, வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மருத்துவர்கள் கனகராஜ் மற்றும் ராஜவேலு ஆகியோர் புற்றுநோய் குறித்து விளக்கவுரை வழங்கினர். மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் தலைமை வகித்துப் பேசும்போது, " காவல் துறையில் பணியாற்றி வரும் பெண் காவலர்கள் தங்களது உடல் நிலையை பாதுகாத்துக்கொள்ள வேண்டும். பெண்களுக்கு கர்பப்பை, மார்பகம், தொண்டை உள்ளிட்ட பகுதிகளில் புற்றுநோய் ஏற்பட அதிக வாய்ப்புகள் உள்ளன. புற்றுநோய் பாதித்தவர்கள் மனம் தளராமல் மருத்துவர்களின் ஆலோசனைகளை பெற வேண்டும். முக்கியமாக உணவு பழக்கங்களை முறையாக கடைபிடித்தால் புற்றுநோயில் இருந்து தப்பிக்கலாம்.
காவல் துறையில் பணியாற்றும் பெண்கள் குடும்ப வேலைகளுக்கு இடையே காவல் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். தினசரி 5 கி.மீ., அல்லது ஒரு மணி நேரம் நடைபயிற்சி மேற்கொள்ள வேண்டும். எவ்வளவு தான் வேலை இருந்தாலும் தினசரி 6 மணி முதல் 8 மணி நேரம் உறங்க வேண்டும்.
பொதுவாக 18 வயது முதல் 19 வயதுள்ள பெண்கள் கர்ப்பம் அடையும் போது, அவர்களின் உடல் நிலை பலவீனம் அடைகிறது. பிரசவத்தின்போது உயிரிழப்பும் நிகழ நேரிடுகிறது. எனவே, குறைந்த வயதில் திருமணம் செய்து கொள்வதை பெண்கள் தவிர்க்க வேண்டும்.
புற்று நோய் தொடர்பான விழிப்புணர்வு முகாமில் கலந்து கொள்ளும் காவல் துறையைச் சேர்ந்த பெண் காவல் அதிகாரிகள் சென்னை மற்றும் அடுக்கம்பாறை அரசு மருத்துவர்களிடம் தங்களுடைய சந்தேகங்களை கேட்டறிந்து தங்களது காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் வசிக்கும் பெண்களுக்கு புற்றுநோய் குறித்த விழிப்புணர்வை அவர்களுக்கு வழங்க வேண்டும்’’ என்றார்.
இந்நிகழ்ச்சியில், மருத்துவர்கள் ஜோதிவேல், மணிகண்ணன், சித்ரா, மாதுரி, துணை காவல் கண்காணிப்பாளர் ரவிச்சந்திரன் (நிலஅபகரிப்பு), தனிப்பிரிவு ஆய்வாளர் அசோகன், காட்பாடி வட்டாட்சியர் பாலமுருகன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.