திருவண்ணாமலை தெற்கு மாவட்ட அதிமுக சார்பில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்த நாளையொட்டி 7,300 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் பணியை மாவட்டச் செயலாளர் அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி தொடங்கி வைத்தார்.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 73-வது பிறந்தநாள் விழாவையொட்டி தி.மலை தெற்கு மாவட்ட அதிமுக சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. தி.மலை காந்தி சிலை அருகே நடைபெற்ற நிகழ்ச்சிக்கு தெற்கு மாவட்டச் செயலாளரும், ஆவின் தலைவருமான அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி தலைமை தாங்கினார்.
நிகழ்ச்சியில், ஜெயலலிதாவின் உருவப் படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்திய அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி, பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கியதுடன், 7ஆயிரத்து 300 பேருக்கு இலவச வேட்டி, சேலை, அரிசி உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கும் பணியை தொடங்கி வைத்தார். மேலும், அவர் தெற்கு மாவட்டத்துக்கு உட்பட்ட ஒன்றியம், நகரம் மற்றும் பேரூராட்சிகளில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்படும் என்றும் தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியில் தி.மலை நகரச் செயலாளர் ஜே.செல்வம் முன்னிலை வகித்தார். மாவட்ட இலக்கிய அணி செயலாளர் நாராயணன், ஒன்றியச் செய லாளர்கள் கலியபெருமாள், மகரிஷி மனோகரன் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் பங்கேற்றனர்.