தமிழகம்

நீட் தேர்வு ஆள் மாறாட்ட வழக்கில் முக்கிய குற்றவாளிகள் கைதாவது எப்போது?- உயர் நீதிமன்ற நீதிபதி கேள்வி

கி.மகாராஜன்

நீட் தேர்வு ஆள் மாறாட்ட வழக்கில் முக்கிய குற்றவாளிகள் எப்போது கைது செய்யப்படுவர் என சிபிசிஐடி-க்கு உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

கேரள மாநிலம் உன்னியாலைச் சேர்ந்த ரஷீத், உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனு:

நீட் தேர்வில் ஆள்மாறட்ட வழக்கில் போலீஸார் என்னை கைது செய்தனர். ஜாமீன் கேட்ட தேனி மாவட்ட நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு தள்ளுபடியானது. ஜாமீன் வழங்கினால் விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்குவேன். நீதிமன்ற நிபந்தனைகளுக்கு கட்டுப்படுவேன்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதி நிர்மல் குமார் முன்பு விசாரணைக்கு வந்தது. மனுதாரர் வழக்கறிஞர் வாதிடுகையில், மனுதாரரின் தந்தை ஜாமீனில் உள்ளார். வழக்கு ஒன்றரை ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. மனுதாரரை போலீஸார் காவலில் எடுத்து விசாரித்துள்ளனர். எனவே ஜாமீன் வழங்க வேண்டும் என்றார்.

சிபிசிஐடி தரப்பில், நீட் ஆள்மாறாட்ட வழக்கில் முக்கிய குற்றவாளிகள் கிருஷ்ணாசிங் உள்ளிட்ட 2 பேர் இன்னும் கைதாகவில்லை. எனவே மனுதாரருக்கு ஜாமீன் வழங்கக்கூடாது எனக் கூறப்பட்டது.

இதையடுத்து நீதிபதி , தலைமறைவாக உள்ள கிருஷ்ணா சிங் உள்ளிட்டவர்களை எப்போது கைது செய்வீர்கள். மனுதாரரிடம் விசாரணை நடத்தியதில் கிடைத்த தகவல்கள், ஆவணங்களை சிபிசிஐடி போலீஸார் தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டார்.

பின்னர், விசாரணையை மார்ச் 10-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

SCROLL FOR NEXT