சென்னையில் வாங்கிய 2 விருப்ப மனுக்களோடு என்.நெவளிநாதன். 
தமிழகம்

அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தொகுதியில் வேறு தொகுதியைச் சேர்ந்த அதிமுக நிர்வாகி போட்டியிட விருப்ப மனு

கே.சுரேஷ்

மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கரின் தொகுதியான புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் போட்டியிடுவதற்காக ஆலங்குடி தொகுதியைச் சேர்ந்த அதிமுக நிர்வாகி ஒருவர் இன்று (பிப்.24) விருப்ப மனு வாங்கியுள்ளார்.

அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தொடர்ந்து 2 முறை போட்டியிட்டு வெற்றி பெற்ற விராலிமலை சட்டப்பேரவைத் தொகுதியில் மீண்டும் அவர் போட்டியிடுவது ஏறத்தாழ உறுதி செய்யப்பட்டுள்ளது. அதற்கேற்பத் தேர்தல் பணிகளும் பல்வேறு கட்டங்களாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதுதவிர, மக்களுக்கான அரசின் பல்வேறு நலத் திட்டங்களையும் மற்ற தொகுதிகளை விஞ்சும் அளவுக்கு அமைச்சர் விஜயபாஸ்கர் செய்து வருகிறார்.

குறிப்பாக, காவிரி-தெற்கு வெள்ளாறு-வைகை- குண்டாறு இணைப்புத் திட்டத்துக்கான அடிக்கல் நாட்டு விழாகூட இந்தத் தொகுதியில்தான் நடைபெற்றது. இதைத் தமிழக முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் அண்மையில் தொடங்கி வைத்தனர்.

இந்நிலையில், அறந்தாங்கி அருகே நெய்வத்தளியைச் சேர்ந்தவரும், அதிமுக வழக்கறிஞர் அணி மாவட்டத் துணைத் தலைவருமான என்.நெவளிநாதன் இன்று சென்னையில் அதிமுக தலைமை அலுவலகத்தில் விராலிமலை மற்றும் ஆலங்குடி தொகுதியில் போட்டியிட விருப்பம் தெரிவித்து, அதற்குரிய தொகை செலுத்தி மனுக்களை வாங்கியுள்ளார்.

இது குறித்து என்.நெவளிநாதன் கூறும்போது, “விராலிமலை தொகுதியில் அமைச்சர் விஜயபாஸ்கர், அரசின் பல்வேறு நலத் திட்டங்களைச் செய்துள்ளார். இதனால், ஏற்கெனவே 2 முறை அளித்ததைப் போன்று இம்முறையும் அதிமுகவுக்கு அத்தொகுதி மக்கள் ஆதரவு அளிப்பார்கள் என எதிர்பார்க்கிறோம்.

எனவே, அங்கு போட்டியிட்டால் வெற்றி பெறுவது எளிது என்பதால், அதிமுக தலைமை அலுவலகத்தில் 2 விருப்ப மனுக்களை வாங்கி மறைந்த முன்னாள் முதல்வர்கள் எம்ஜிஆர், ஜெயலலிதா சிலை முன்பு வைத்து, வணங்கியுள்ளேன். பின்னர், உள்ளூர் மற்றும் விராலிமலை முருகன் கோயிலில் வழிபட்ட பிறகு மனுவைப் பூர்த்தி செய்து மார்ச் 3-ம் தேதி தலைமையிடம் கொடுக்க உள்ளேன்.

மற்றபடி வேறெந்த அரசியல் உள்நோக்கமும் இல்லை. எனது தொகுதியான ஆலங்குடி தொகுதியில் போட்டியிடவும் விருப்ப மனு பெற்றுள்ளேன்" என்று தெரிவித்தார்.

இவர் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளராக இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT