தமிழகம்

உண்மையான தொண்டர்கள் ஒன்றிணைவோம்; விரைவில் பொதுமக்களை சந்திக்கிறேன்: சசிகலா பேச்சு

செய்திப்பிரிவு

ஜெயலலிதாவின் உண்மையான தொண்டர்கள் ஒன்றிணைந்து தேர்தலில் வெற்றி பெறுவோம், விரைவில் நான் பொதுமக்களை சந்திப்பேன் என ஜெயலலிதாவின் பிறந்த நாளில் சசிகலா பேசினார்.

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் 73-வது பிறந்த நாள் இன்று. தி.நகரில் உள்ள தனது இல்லத்தில் அவரது உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் சசிகலா. வந்திருந்த தொண்டர்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது:

“ஜெயலலிதாவின் 73-வது பிறந்த நாளுக்கு வந்துள்ள அனைவருக்கும் வணக்கம். நான் சிறையிலிருந்து வெளியில் வந்தபோது கரோனாவில் பாதிக்கப்பட்டபோது தமிழக மக்கள் என் மீது அன்பு காட்டினார்கள். நான் நலம் பெற்று தமிழகம் வந்தேன். அதற்கு என்னுடைய நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஜெயலலிதாவின் உண்மையான உடன்பிறப்புகள் ஒன்றாக இணைந்து தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெறுவோம். நம்முடைய இலக்கு ஜெயலலிதா நமக்குச் சொல்லிவிட்டுச் சென்ற மீண்டும் தமிழகத்தில் நூறாண்டுகளுக்கு மேலாக நம்முடைய ஆட்சி நீடிக்க வேண்டும் என்று சொல்லிவிட்டுச் சென்றிருந்தார்.

அதை மனதில் நிறுத்தி நம்முடைய உடன் பிறப்புகள் அனைவரும் ஒன்றிணைந்து இந்தத் தேர்தலில் அமோக வெற்றி பெற்று நாம் ஆட்சி அமைக்க வேண்டும் என்பதே என்னுடைய எண்ணமாகும். அதைச் செய்வீர்கள் என்கிற நம்பிக்கையும் எனக்கு உள்ளது. ஏனென்றால் நீங்கள் ஜெயலலிதாவின் உண்மைத் தொண்டர்கள். நிச்சயமாக இதைச் செய்வீர்கள். நானும் உங்களுக்குத் துணை இருப்பேன்”.

இவ்வாறு சசிகலா பேசினார்.

மேலும், செய்தியாளர்களிடம் கூறுகையில், கூடிய விரைவில் பொதுமக்களையும், தொண்டர்களையும் நேரில் சந்திப்பேன் என்று சசிகலா தெரிவித்தார்.

SCROLL FOR NEXT