முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்த நாளையொட்டி இன்று கரூர் மாவட்டத்தில் மினி பேருந்துகள் கட்டணமின்றி இலவசமாக இயக்கப்படுகின்றன.
இன்று (பிப். 24-ம் தேதி) முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 73-வது பிறந்த நாளாகும். இதனையொட்டி கரூர் மாவட்ட அமைப்புசாரா ஓட்டுநர் அணி சார்பாக இன்று (பிப். 24-ம் தேதி) காலை 7 மணி முதல் இரவு 10 மணி வரை கட்டணம் இல்லா மினி பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
கரூர் மினி பேருந்து நிலையத்தில் அதிமுக மாவட்ட அவைத் தலைவர் ஏ.ஆர்.காளியப்பன் அதிமுக கொடியை அசைத்துக் கட்டணம் இல்லா மினி பேருந்துகள் சேவையை இன்று (பிப். 24-ம் தேதி) காலை தொடங்கி வைத்தார். கரூர் நகரில் உள்ள 60 மினி பேருந்துகளில் இன்று காலை 7 மணி முதல் இரவு 10 மணி வரை பொதுமக்கள் கட்டணமின்றிப் பயணம் செய்யலாம்.
அதிமுக கரூர் மத்திய நகரச் செயலாளர் வை.நெடுஞ்செழியன், கரூர் வடக்கு நகரச் செயலாளர் பாண்டியன் உள்ளிட்ட நிர்வாகிகள், கட்சியினர், கரூர் மாவட்ட அமைப்புசாரா ஓட்டுநர் அணி நிர்வாகிகள், மினி பேருந்து ஓட்டுநர்கள், நடத்துநர்கள் கலந்து கொண்டனர்.
முன்னதாக மினி பேருந்து நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த ஜெயலலிதா உருவப் படத்திற்கு மாவட்ட அவைத் தலைவர் ஏ.ஆர்.காளியப்பன் மாலை அணிவித்து, மலர் தூவி, வணங்கி மரியாதை செலுத்தினார்.
கரூர் நகரில் 30க்கும் மேற்பட்ட இடங்களிலும் மாவட்டத்தில் குளித்தலை உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் ஜெயலலிதா உருவப் படத்திற்கு அதிமுகவினர் மாலை அணிவித்துப் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினர்.