மதுரை மாவட்டத்தில் 150-க்கும் மேற்பட்ட கிரானைட் குவாரிகள் செயல்பட்டு வந்தன. முறைகேடாக செயல்பட்ட கிரானைட் குவாரிகளால் அரசுக்கு பல கோடி ரூபாய் இழப்புஏற்பட்டதாக புகார் எழுந்ததால், 2012-ம் ஆண்டு முதல் கிரானைட் குவாரிகளுக்குத் தடை விதிக்கப்பட்டது.
இந்நிலையில், கடந்த மக்களவைத் தேர்தலின்போது, மதுரையில் கிரானைட் குவாரிகளைத் திறக்கக் கோரி பாஜகவினர் போராட்டங்களை நடத்தினர். அதோடுநாங்கள் ஆட்சிக்கு வந்தால் கிரானைட் குவாரிகளைத் திறப்போம் என்று வெளிப்படையாகக் கூறினர்.
மக்களவைத் தேர்தல் முடிந்ததும் இந்தப் பிரச்சினை அடங்கியிருந்தது. தற்போது சட்டப்பேரவைத் தேர்தல் வர இருக்கிற நிலையில் மீண்டும் கிரானைட் குவாரிகளைத் திறக்க வேண்டும் என்ற கோரிக்கை ஒலிக்கத் தொடங்கி இருக்கிறது.
திமுக குறும்படம் வெளியீடு
இந்த முறை பாஜகவின் கிரானைட் குவாரி திறக்கும் ஆதரவுநிலைப்பாட்டை ஆளும்கட்சியான அதிமுகவும், பிரதான எதிர்க்கட்சியான திமுகவும் ஆதரிப்பதாகக் கூறப்படுகிறது. அதை உறுதிப்படுத்தும் வகையில் சமீபத்தில் மதுரை ஒத்தக்கடையில் நடந்த ‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ பிரச்சார நிகழ்ச்சியில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் மதுரை மாவட்டத்தின் முக்கியப் பிரச்சினைகளைப் பற்றிய ஒரு குறும்படம் எல்இடி திரையில் ஒளிபரப்பப்பட்டது.
அதில், கிரானைட் குவாரிகளைத் திறக்காததால் அதில் பணிபுரிந்த தொழிலாளர்கள் சிரமப்படுவதாகவும், அதைத் திறக்க வேண்டும் என்றும் தொழிலாளர்கள் வலியுறுத்துவது போன்ற காட்சிகள் இடம்பெற்றிருந்தன. இதன்மூலம், மதுரையில் மூடப்பட்ட கிரானைட் குவாரிகளைத் திறக்க திமுகவினர் ஆர்வப்படுவது தெரியவந்தது.
முறைகேடான கிரானைட் குவாரிகள் செயல்பட்ட விவகாரத்தில் அதன் உரிமையாளர்களுக்கும், திமுகவினருக்கும் தொடர்பு இருந்ததாலேயே ஜெயலலிதா தலைமையிலான அதிமுக அரசு,கிரானைட் குவாரிகளை முடக்கியதாக அப்போது பரபரப்பாகப் பேசப்பட்டது.
அதிமுக மவுனம்
தற்போது பாஜகவும், திமுகவும் கிரானைட் குவாரிகளைத் திறக்க ஆர்வப்படும் நிலையில் அதிமுக இதுவரை வெளிப்படையாக எந்தக் கருத்தையும் தெரிவிக்கவில்லை. அதிமுகவின் இந்த மவுனம், கிரானைட் குவாரிகளைத் திறக்க அதிமுகவும் விரும்புகிறதோ என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.
அரசியல், கொள்கை அடிப்படையில் மட்டுமல்லாது விரைவில் வரவிருக்கிற தேர்தல் களத்தில் எதிரெதிர் அணியில் போட்டியிடக்கூடிய இந்தக் கட்சிகள், கிரானைட் குவாரி விஷயத்தில் மட்டும் ஓரணியில் நிற்பதாக சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.