தமிழக இடைக்கால பட்ஜெட்டுக்கு பாமக நிறுவனர் ராமதாஸ், தமாகா தலைவர் ஜி.கே.வாசன்ஆகியோர் வரவேற்பு தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக அவர்கள் கூறியுள்ளதாவது:
பாமக நிறுவனர் ராமதாஸ்: தமிழக அரசின் நிதிநிலை அறிக்கையில் விவசாயிகள் நலனுக்கும், வேளாண்மை வளர்ச்சிக்கும் அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் வளர்ச்சியை உறுதிசெய்யும் வகையிலும், மாநில உரிமைகளை வென்றெடுக்கும் வகையிலும் பல்வேறு அறிவிப்புகள் இடம் பெற்றுள்ளன. அவை வரவேற்கத்தக்கவை.
தமாகா தலைவர் ஜி.கே.வாசன்:தமிழக அரசின் இடைக்கால பட்ஜெட்அனைத்து தரப்பு மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றியிருக்கிறது. இந்த பட்ஜெட் கரோனாவால் பாதிக்கப்பட்ட அனைத்து தரப்பு மக்களும், தொழில்களும் முன்னேறி மக்களின் வளமானவாழ்வுக்கும், மாநிலத்தின் மேம்பாட்டுக்கும் வழி வகுக்கும்.
தலைவர்கள் குற்றச்சாட்டு
மதிமுக பொதுச்செயலர் வைகோ: மூடப்பட்டுள்ள சிறு, குறு, நடுத்தர தொழிற்சாலைகளை மீண்டும் இயங்கச் செய்ய எந்த ஊக்குவிப்பு திட்டமும் இல்லை.ஆட்சியின் இறுதி காலத்தில் உள்ள அதிமுக அரசின் இடைக்கால பட்ஜெட்டால் எந்த பயனும் விளையப்போவது இல்லை.
தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி: இடைக்கால பட்ஜெட் கவர்ச்சிகரமாக உள்ளது. சட்டப்பேரவை தேர்தலுக்கு பிறகு அமைய உள்ள புதிய ஆட்சிக்கு ரூ.5.70 லட்சம் கோடியை கடன் சுமையாக வைத்துவிட்டு செல்வதுதான் அதிமுக அரசின் சாதனையாக இருக்கும்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலர் கே.பாலகிருஷ்ணன்: மின்துறை உள்ளிட்ட பல துறைகளில் காலி பணியிடங்களை பூர்த்தி செய்ய எந்த அறிவிப்பும் இல்லை. இளைஞர்கள் வேலைவாய்ப்பு பற்றி அரசுக்கு எந்த அக்கறையும் இல்லை என்பதையே இந்த பட்ஜெட் காட்டுகிறது.
இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலர் இரா.முத்தரசன்: கடந்த தேர்தலில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அறிவித்த படிப்படியான மதுவிலக்கு, நிறைவாக பரிபூரண மதுவிலக்குஎன்பதை இந்த பட்ஜெட் கைகழுவிவிட்டது. தேர்தலை மனதில் கொண்டு, சட்டப்பேரவையை தேர்தல் பிரச்சார மேடை ஆக்கியுள்ளது இடைக்கால பட்ஜெட்.
அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன்:ஒரே ஆண்டில் ரூ.1.70 லட்சம் கோடி கடன் அதிகமாகி இருப்பது கவலை அளிக்கிறது. பெட்ரோல், டீசல்மீதான வரியை குறைக்காதது ஏமாற்றம்.அளவுக்கு அதிகமாக கடன் வாங்கியுள்ள நிலையிலும், நடப்பு நிதியாண்டில் பற்றாக்குறை ரூ.84 ஆயிரம் கோடியாக இருக்கும் என்ற அறிவிப்பு, அரசின் நிர்வாகத் திறமையின்மையை காட்டுகிறது.
மமக தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா: நடக்க உள்ள தேர்தலை கருத்தில் கொண்டு வாக்காளர்களே ஏமாற்றம் அடையும் அளவுக்கு வெற்று வாக்குறுதிகளை அறிவிப்புகளாக அள்ளி வீசியுள்ளனர். இது சர்க்கரை நோயாளிகளுக்கு இந்த அரசு வழங்கியுள்ள இனிப்பை போன்றது.
தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன்: தேர்தல் செலவுக்காக தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட். இந்த பட்ஜெட்டால் மாநிலத்தின் வளர்ச்சிக்கோ, மக்களின் வளர்ச்சிக்கோ எந்த பயனும் இல்லை.
கொமதேக பொதுச் செயலாளர் ஈஸ்வரன்: கடந்த 2011-ல் ஒரு லட்சம் கோடியாக இருந்த தமிழக அரசின் கடன் தற்போது ரூ.5.70 லட்சம் கோடியாக உயர்த்தி, தமிழக மக்களைக் கடனாளிகளாக மாற்றியிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. வெறும் சம்பிரதாயத்துக்காக வாசிக்கப்பட்ட இடைக்கால பட்ஜெட். இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.