திமுகவின் தேர்தல் பிரச்சாரப் பாடலான ‘ஸ்டாலின்தான் வாராரு, விடியல் தரப்போறாரு’ என்ற பாடலை மக்கள் மத்தியில் கொண்டு சேர்ப்பதற்கான பணிகளில் திமுகவினர் ஈடுபட்டு வருகின்றனர். அனைத்து தரப்பினருக்கும் இப்பாடல் வரிகளை கொண்டு சேர்க்கும் வகையில் பாடல் வரிகளை ‘மொபைல் ரிங்டோன்’ ஆக மாற்றப்பட்டு, அதனை முன்னணி அலைபேசி நிறுவனங்களின் மூலம் காலர் டியூனாக பெறும் வகையில் மாற்றப்பட்டுள்ளது. பொள்ளாச்சியில் கோவை தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் தென்றல் செல்வராஜ் அப்பாடலின் காலர் டியூனை நேற்று வெளியிட்டார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறும்போது ‘‘பொள்ளாச்சியில் நடைபெற்ற ‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ நிகழ்ச்சியில் பொதுமக்களிடம் இருந்து 15 ஆயிரம் மனுக்கள் பெறப்பட்டுள்ளன. பொள்ளாச்சியை மாவட்டமாக உருவாக்க வேண்டும், கோதவாடி குளத்து பிஏபி தண்ணீர், தென்னை வளர்ச்சி வாரிய தலைமை அலுவலகம் பொள்ளாச்சியில் அமைக்க வேண்டும், ஆனைமலையாறு – நல்லாறு திட்டம், காய்கறி பதப்படுத்தும் கிடங்கு அமைக்க வேண்டும், பொள்ளாச்சியில் மருத்துவம் மற்றும் சட்டக் கல்லூரி அமைக்க வேண்டும், மாட்டுச் சந்தையை மீண்டும் மீன்கரை சாலைக்கு கொண்டு வர வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை மனுவாக அளித்துள்ளனர்’’ என்றார்.