பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோவை, திருப்பூர், நீலகிரி மாவட்டங்களில் அங்கன்வாடி ஊழியர்கள் இரண்டாவது நாளாக நேற்றும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அரசு ஊழியராக்குதல், முறையான காலமுறை ஊதியம் வழங்குதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று முன்தினம் முதல் அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் ஆட்சியர் அலுலகங்களில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை இரண்டாவது நாளாக முற்றுகையிட்ட அங்கன்வாடி ஊழியர்கள், ஆட்சியர் அலுவலகம் முன் சாலையில் அமர்ந்து காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களில் சிலர் கோரிக்கைகளை வலியுறுத்தி கும்மியடித்துப் போராட்டம் நடத்தினர். மேலும் சிலர் அழுது, ஒப்பாரி வைத்தபடி போராட்டம் நடத்தினர்.
திருப்பூரில் அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கம் சார்பில் நேற்று இரண்டாவது நாளாக ஆட்சியர் அலுவலகம் முன் சமையல் செய்து, காத்திருப்புப் போராட்டத்தை தொடர்ந்தனர்.
இந்தப் போராட்டத்தில் சங்கத்தின் மாநிலத் துணைத் தலைவர் பாக்கியம், மாவட்டச் செயலர் எல்லம்மாள் உட்பட 300-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். கோரிக்கை நிறைவேறும்வரை தொடர்ந்து காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.
இதேபோல, உதகையில் உள்ள நீலகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பும் போராட்டம் நடைபெற்றது.