தமிழகம்

வன்கொடுமையால் பாதிக்கப்படும் பெண்கள் பிறழ்சாட்சியாக மாறுவதை தடுக்க நடவடிக்கை வேண்டும்: நீதிபதி சதீஷ் கே.அக்னிஹோத்ரி வேண்டுகோள்

செய்திப்பிரிவு

வன்கொடுமையால் பாதிக்கப்படும் பெண்கள் பிறழ்சாட்சியாக மாறு வதைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழு செயல் தலைவரும் உயர் நீதிமன்ற நீதிபதியுமான சதீஷ் கே.அக்னி ஹோத்ரி கூறினார்.

ஏழை, எளியவர்களுக்கு இலவச சட்ட உதவி அளிப்பதற்காக தேர்ந் தெடுக்கப்பட்டுள்ள வழக்கறிஞர் களுக்கு திறன் மேம்பாடு மிகவும் அவசியம். வழக்கறிஞர் என்ற தகுதி மட்டும் இருந்தால் போதாது. அவ்வப்போது அவர்களது திறனும் மேம்படுத்தப்பட வேண்டும் என்று தேசிய சட்டப்பணிகள் ஆணைக் குழு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, கடந்த 30-ம் தேதி திருவாரூரில் 32 வழக்கறிஞர்களுக்கு திறன் மேம் பாட்டுப் பயிற்சி அளிக்கப்பட்டது. டெல்லியை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் ‘பெண்கள் மீதான வன்கொடுமைக்கு எதிரான வழக்கறிஞர்கள் கூட்டமைப்பு’ இப்பயிற்சி அளித்தது.

இதையடுத்து இலவச சட்ட உதவிக்காக தேர்ந்தெடுக்கப்பட் டுள்ள சென்னை மாவட்ட வழக் கறிஞர்களுக்கு பயிற்சி அளிக்கப் பட்டது. இதன் தொடக்க விழா சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள மாற்றுமுறை தீர்வு மையத்தில் நடைபெற்றது. உயர் நீதிமன்ற நீதிபதிகள் சதீஷ் கே.அக்னி ஹோத்ரி, தேவதாஸ் ஆகியோர் பயிற்சியை தொடங்கி வைத்தனர்.

விழாவில் நீதிபதி சதீஷ் கே.அக்னி ஹோத்ரி பேசியதாவது:

சென்னையில் பெண்களுக்கு எதிரான வன்கொடுமை வழக்கில் 60 வழக்குகளில் குற்றவாளிக்கு தண்டனை வழங்கப்படுகிறது. மீதமுள்ள 40 வழக்குகளில், பாதிக்கப்பட்ட பெண்ணே பிறழ் சாட்சியாக மாறிவிடுவதால் குற்றம் சாட்டப்பட்டவர்கள் விடுதலை ஆகி விடுகின்றனர். பொருளாதாரப் பிரச்சினை, அழுத்தம், சாதி ரீதி யான வற்புறுத்தல் உள்ளிட்ட கார ணங்களால் பெண்கள் பிறழ்சாட்சி யாகின்றனர். எவ்வித அழுத்தத் துக்கும் பயப்படாமல், நீதிமன்றத் தில் உண்மையை எடுத்துக்கூறி, குற்றவாளிகளுக்கு தண்டனை பெற் றுத் தரவேண்டும். அதற்கு அவர் களுக்கு கவுன்சலிங் தரவேண்டும்.

குற்றம் செய்தவர்கள் தண்டிக்கப் பட்டால்தான் பெண்களுக்கு எதிரான வன்கொடுமை குறையும். அதற்காக தமிழ்நாடு மாநில சட்டப் பணிகள் ஆணைக் குழுவில் பட்டியலிடப்பட்டுள்ள 382 வழக் கறிஞர்களும் தங்கள் திறனை மேம்படுத்திக் கொள்ள வேண்டியது அவசியம்.

இவ்வாறு அவர் பேசினார்.

சென்னையைச் சேர்ந்த 26 பேர், திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், விழுப்புரம் மாவட்டங்களில் இருந்து வந்திருந்த தலா 6 பேர் என மொத்தம் 50 வழக்கறிஞர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. பெண்கள் மீதான வன்கொடுமையை தடுப்ப தற்கான சட்டம் குறித்த புத்தகம் வெளியிடப்பட்டது. அதன் முதல் பிரதியை நீதிபதி சதீஷ் அக்னி ஹோத்ரி வெளியிட, நீதிபதி தேவ தாஸ், மும்பை வழக்கறிஞர் கிரண் ஆகியோர் பெற்றுக்கொண்டனர். பயிற்சிக்கான ஏற்பாடுகளை தமிழ்நாடு மாநில சட்டப்பணிகள் ஆணைக் குழு உறுப்பினர் செயலர் ஆர்.எம்.டி. டீக்கா ராமன் செய்திருந்தார்.

SCROLL FOR NEXT