தமிழகம்

பெட்ரோல், டீசல் விலை குறைப்பு சலுகை முழுமையாக மக்களுக்கு கிடைக்க வேண்டும்: ஜி.கே.வாசன்

செய்திப்பிரிவு

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சி அடையும் போது பெட்ரோல், டீசல் விலை குறைப்பு சலுகை முழுமையாக மக்களுக்கு கிடைக்க புதிய விலை நிர்ணயக் கொள்கையை மத்திய அரசு வகுக்க வேண்டும் என ஜி.கே.வாசன் வலியுறுத்தி உள்ளார்.

இதுகுறித்து, தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

மத்திய பாஜக அரசு டீசல், பெட்ரோல் விலை நிர்ணயக் கொள்கை தொடர்பாக கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற தவறிவிட்டது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்பட டீசல், பெட்ரோல் விலையை நிர்ணயம் செய்வது என்பது நடைமுறையில் உள்ளது. ஆனால் கச்சா எண்ணெய் விலை உயரும் போது விலையை உடனடியாக அதிகமாக உயர்த்துவதும், அதே நேரத்தில் கச்சா எண்ணெய் விலை சரியும் போது அதே அளவுக்கு குறைப்பதுமில்லை.

பெட்ரோல், டீசல் விலை குறித்து மத்திய அரசின் தவறான கொள்கை முடிவால் எண்ணெய் நிறுவனங்களுக்கும், கலால் வரி உயர்வால் மத்திய அரசுக்கும் பல ஆயிரம் கோடி ரூபாய் வருமானம் கிடைக்கிறது.

கடந்த ஓராண்டில் கச்சா எண்ணெய் விலை 50 சதவீதத்துக்கு மேல் வீழ்ச்சி அடைந்த போதும், எண்ணெய் நிறுவனங்கள் டீசலுக்கு 23 சதவீதமும், பெட்ரோலுக்கு 13 சதவீதம் மட்டுமே குறைத்துள்ளது. இதனால் நுகர்வோர்களுக்கு கிடைக்க வேண்டிய சுமார் 10 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் சலுகைத் தொகை கிடைக்கவில்லை. ஆனால், எண்ணெய் நிறுவனங்களுக்கு ரூ.13 ஆயிரம் கோடி லாபம் கிடைத்துள்ளது.

எனவே, பொதுமக்கள் நலன் கருதி பெட்ரோல், டீசல் விலை நிர்ணயக் கொள்கையில், சாதாரண மக்களும் பயன்பெறும் வகையில் கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சி அடையும் போது அதன் முழு பயனும் மக்களுக்குச் சென்றடைய மத்திய அரசு புதிய கொள்கையை வகுக்க வேண்டும்.

இவ்வாறு வாசன் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT