கோவையில் கைது செய்யப்பட்ட மாவோயிஸ்ட் இயக்கத்தினர் ஐந்து பேரின் நீதிமன்றக் காவல் நவ.30-ம் தேதி வரை நீட்டிக் கப்பட்டுள்ளது.
கோவை கருமத்தம்பட்டியில் கடந்த மே மாதம் மாவோயிஸ்ட் இயக்கத்தைச் சேர்ந்த ரூபேஷ், சைனா, அனூப், கண்ணன், வீரமணி ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் பேர் மீது சட்டவிரோத செயல்கள் தடுப்புச் சட்டத்திலும் பின்னர் தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழும் வழக்கு பதிவு செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். கடந்த மாதம் 27-ம் தேதி கோவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு நவ.2-ம் தேதி வரை நீதிமன்றக் காவல் நீட்டிக்கப்பட்டது.
இந்நிலையில், காவல் முடி வடைந்ததால் நேற்று ரூபேஷ், சைனா, அனூப், கண்ணன் ஆகிய 4 பேர் கோவை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில், நீதிபதி பொங்கியப்பன் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டனர். மற்றொரு நபரான வீரமணி, வழக்கு விசா ரணைக்காக கர்நாடக மாநிலம் உடுப்பி நீதிமன்றத்துக்கு அழைத் துச் செல்லப்பட்டிருந்தார். 5 பேரின் நீதிமன்றக் காவலையும் நவ.30-ம் தேதி வரை நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து மாவோயிஸ்ட் இயக்கத்தைச் சேர்ந்த ரூபேஷ் - சைனா தம்பதி சந்தித்துப் பேசுவதற்கு நீதிமன்றத்தில் அனுமதி கேட்டனர். நீதிபதி அனுமதி வழங்கிய பின் இருவரும் சந்தித்துப் பேசினர்.
ஐந்து பேர் மீதும், கடந்த 3 மாதங்களாக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படாமல் இருந்து வந்தது. இந்நிலையில் கடந்த 30-ம் தேதி மாவோயிஸ்ட் இயக்கத்தினர் மீதான குற்றப்பத்திரிகையை நீதி மன்றத்தில் கியூ பிரிவு போலீஸார் தாக்கல் செய்தனர்.
அதன் நகல் இதுவரை ஐந்து பேருக்கும் வழங்கப்பட வில்லை என்பதால் நவ.30-ம் தேதி அவர்களுக்கு நகல் கொடுக்கப்பட வாய்ப்புள்ளதாக மாவோயிஸ்ட்கள் தரப்பு வழக் கறிஞர் பாலமுருகன் தெரிவித்தார்.
நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப் பட்டபோது தங்களை தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ததைக் கண்டித்தும், அரசை விமர்சித்து பாடல் பாடி கைதான கோவனுக்கு ஆதரவாகவும் முழக் கங்கள் எழுப்பினர்.