தமிழகம்

தொழிற்கல்வி மாணவர்களின் திறனை அதிகரிக்க சிபிஎஸ்இ புதிய திட்டம்: தொழிற்சாலைகளில் நேரடி அனுபவம் பெற ஏற்பாடு

ஜெ.கு.லிஸ்பன் குமார்

தொழிற்கல்வி பிரிவு மாணவர் களை திறன்மிக்கவர்களாக மாற்றும் வகையில் சிபிஎஸ்இ பள்ளிகளில் புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. அதன்படி, மாணவர்கள் படிக்கும் போதே தொழிற்சாலைகளில் நேரடி அனுபவம் பெறுவார்கள்.

பள்ளிப் படிப்பை முடிக்கின்ற மாணவர்களின் வேலைவாய்ப்புத் திறனை அதிகரிக்கும் நோக்கில் சிபிஎஸ்இ பள்ளிகளில் தொழிற்கல்வி படிப்புகளுக்கு தற்போது அதிகளவு முக்கியத் துவம் கொடுக்கப்பட்டு வருகிறது. இன்றைய வேலைவாய்ப்புச் சூழலுக்கு ஏற்ப புதிய தொழிற் கல்வி படிப்புகள் அவ்வப்போது அறிமுகப்படுத்தப்பட்டு வருகின் றன.

இந்த நிலையில், 11, 12-ம் வகுப்பு தொழிற்கல்வி பிரிவு மாணவர்களை திறன்மிக்கவர்களாக மாற்றும் வகையில் புதிய திட்டத்தை செயல்படுத்த சிபிஎஸ்இ முடிவுசெய்துள்ளது. அதன்படி, மாணவர்கள் படிக்கும் காலத்தில் கண்டிப்பாக 2 வாரத்துக்கு ஒருமுறை உள்ளூரில் உள்ள ஏதேனும் ஒரு தொழிற்சாலைக்கு அழைத்துச் செல்லப்படுவார் கள்.

அந்த தொழிற்சாலை இயங்கும் விதம், குறிப்பிட்ட தொழிலின் பல்வேறு கூறுகள், தொழிற்சாலையை நடத்த தேவைப்படும் பல்வேறு விதமான திறமைகள் குறித்து அவர்களுக்கு விளக்கிச் சொல்லப்படும். அங்குள்ள ஊழியர்களுடன் மாணவர்கள் கலந்துரையாடி தங்கள் சந்தேகங்களை நிவர்த்தி செய்துகொள்ளலாம். மாணவர்களின் வேலைவாய்ப்புத் திறனை அதிகரிக்கவும், தொழில் நிறுவனங்கள் எதிர்பார்க்கும் வகையில் அவர்களை வடிவமைக்கவும், வெறும் படிப்பு மட்டுமல்லாமல் தொழிற்கல்வி மீது ஆர்வத்தை ஏற்படுத்தவும் இந்த புதிய திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

மேலும், சமுதாய தலைவர்கள், அரசு உயர் அதிகாரிகள், மருத்துவர்கள், என்ஜினீயர்கள், வேளாண்மையில் சாதனை படைத்த விவசாயிகள் போன்றோர் பள்ளிகளுக்கு வரவழைக்கப்பட்டு அவர்கள் தங்கள் அனுபவங்களை மாணவர்களுடன் பகிர்ந்து கொள்ளவும் ஏற்பாடு செய்யப் படும்.

அதிகாரி தகவல்

இந்த புதிய திட்டம் குறித்து சிபிஎஸ்இ சென்னை மண்டல உதவி செயலாளர் சீனிவாசன் கூறும்போது, “மத்திய அரசு தற்போது தொழிற்கல்விக்கு அதிக முக்கியத்துவம் அளித்து வருகிறது. மாணவர்கள் தொழில் நிறுவனங்களுக்கு நேரில் சென்று பார்வையிடுவதால் அவர்களுக்குப் படிப்புடன் தொழில்ரீதியிலான நேரடி அனுபவமும் கிடைக்கும். படித்து முடிக்கும்போது வேலைக்கான திறன் பெற்றவர்களாக இருப்பார்கள். இந்த புதிய திட்டம் தொழிற்கல்வி பிரிவு மாணவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்” என்றார்.

SCROLL FOR NEXT