பட்ஜெட் தாக்கலுக்கு முன் பேச அனுமதி மறுக்கப்பட்டதால் துரைமுருகன் தலைமையில் திமுக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு செய்தனர்.
இன்று காலை 11 மணிக்கு இடைக்கால பட்ஜெட்டைத் தாக்கல் செய்ய நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தை சபாநாயகர் அழைத்தார். அப்போது எழுந்து நின்ற எதிர்க்கட்சி துணைத் தலைவர் துரைமுருகன் பேச முற்பட்டார். அப்போது சபாநாயகர் அவரை அனுமதிக்க மறுத்து என்னவென்று கேட்டார்.
துரைமுருகன்: எங்கள் கருத்தைச் சொல்லிவிடுகிறேன்.
சபாநாயகர் தனபால்: நான் நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்ய அவரை அழைத்துவிட்டேன்.
துரைமுருகன்: நாங்கள் கருத்தைச் சொல்லிவிட்டால் அதற்கும் சேர்த்தே அவர் பதில் சொல்லட்டும்.
சபாநாயகர்: நீங்கள் என்ன சொல்லவேண்டுமோ சொல்லிவிட்டுச் சொல்லுங்கள், மைக் தரமாட்டேன், நீங்கள் பேசுவது சபைக் குறிப்பிலும் ஏறாது
இதையடுத்து வாக்குவாதம் ஏற்பட்டது.
சபாநாயகர்: அவருக்கு அனுமதி அளித்துவிட்டேன். அவர் பட்ஜெட் உரையை வாசிக்க ஆரம்பிக்கிறார். நீங்கள் உட்காருங்கள்.
இதையடுத்து ஓபிஎஸ் இடைக்கால பட்ஜெட்டைத் தாக்கல் செய்தார். அவர் இடைக்கால பட்ஜெட்டைத் தாக்கல் செய்து பேசத் தொடங்கிய பின்னரும் சபையில் கூச்சல் குழப்பம் நிலவியது.
இதனால் சற்று நிதானித்த ஓபிஎஸ், மீண்டும் அனைவருக்கும் வணக்கம் சொல்லிவிட்டு பட்ஜெட் உரையைப் படிக்கத் தொடங்கினார்.
துரைமுருகனும் பேசிக்கொண்டே இருந்தார். பின்னர் சற்று நேரத்தில் அமைதி நிலவியது.
இதன் பின்னர் துரைமுருகன் தலைமையில் திமுக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு செய்தனர்.