உளுந்தூர்பேட்டையில் நடைபெற்ற ஸ்ரீ வெங்கடாஜலபதி கோயில் அடிக்கல் நாட்டு விழாவில் கலந்து கொண்ட முதல்வர் பழனிசாமி. உடன் சட்டத் துறை அமைச்சர் சி.வி.சண்முகம், தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத் உள்ளிட்டோர். 
தமிழகம்

திருப்பதி தேவஸ்தானம் சார்பில் உளுந்தூர்பேட்டையில் ஸ்ரீவெங்கடாஜலபதி கோயிலுக்கு முதல்வர் அடிக்கல் நாட்டினார்

செய்திப்பிரிவு

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் சார்பில் கட்டப்படவுள்ள வெங்கடாஜலபதி கோயில் கட்டும் பணிக்கான அடிக்கல் நாட்டு விழாவில் முதல்வர் பழனிசாமி கலந்து கொண்டு அடிக்கல் நாட்டினார்.

நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் மூலம் வெங்கடாஜலபதி கோயில்கள் கட்டப்பட்டு வருகின்றன. இதேபோன்று, உளுந்தூர்பேட்டையிலும் வெங்கடாஜலபதி கோயில் கட்டப்படும் என உளுந்தூர்பேட்டை சட்டப்பேரவை உறுப்பினரும், திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழுவின் தமிழக பிரதிநிதியுமான ரா.குமரகுரு அறிவித்திருந்தார்.

அதன்படி கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் சேலம் புறவழிச்சாலை சந்திப்பில் 4.5 ஏக்கர் நிலப்பரப்பில் கோயில் கட்டுமானப் பணிக்கான நிலம் மற்றும் நன்கொடையாக ரூ.3.16 கோடியை கடந்த பிப்.7-ம் தேதிதிருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழுத் தலைவர் ஓய்.வி.சுப்பா ரெட்டியிடம், அறங்காவலர் குழு உறுப்பினர் குமரகுரு வழங்கினார்.

இதையடுத்து கோயில் கட்டுமானப் பணிகள் தொடங்க ஏதுவாக நேற்று பூமி பூஜை மற்றும் அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. வேத விற்பன்னர்கள் மந்திரம் ஓத, சிறப்புபூஜைகள் நடத்தப்பட்டு, முதல்வர்பழனிசாமி கலந்து கொண்டு அடிக்கல் நாட்டினார். தொடர்ந்துஅமைச்சர்கள் சி.வி.சண்முகம், எம்.சி.சம்பத், நிர்வாக அறங்காவலர் குழுத் தலைவர் ஒய்.வி.சுப்பாரெட்டி ஆகியோரும் அடிக்கல் நாட்டினர்.

அதைத்தொடர்ந்து உளுந்தூர்பேட்டை-திருப்பதி இடையேயான பேருந்து போக்குவரத்தையும் முதல்வர் தொடங்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் சட்டப்பேரவை உறுப்பினர்கள் அ.பிரபு, சத்யா பன்னீர்செல்வம், திருமலை திருப்பதி தேவஸ்தான செயல் அலுவலர் கே.எஸ்.ஜவகர்ரெட்டி, ராமகிருஷ்ணா ஆஸ்ரம தலைவர் ஸ்ரீமத் ஸ்வாமி அனந்தானந்தஜி மகராஜ், கள்ளக்குறிச்சி ஆட்சியர் கிரண்குராலா, முன்னாள் அமைச்சர் மோகன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் காமராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்ச்சியையொட்டி சீனுவாச திருக்கல்யாணமும் அந்த வளாகத்தில் நடைபெற்றது.

SCROLL FOR NEXT