கனடாவின் டொரான்டோ பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைவதற்கு தேவைப்படும் ரூ.3.2 கோடி நிதியை தமிழக அரசு வழங்க வேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுதொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை:
தமிழக அரசு சில ஆண்டுகளுக்கு முன்பு ரூ.10 கோடி வழங்கி,ஹார்வர்டு தமிழ் இருக்கை அமைய உதவி செய்தது. அதற்கு நானும்கூட நிதி வழங்கினேன். இந்த நிலையில், கனடாவின் டொரான்டோ பல்கலைக்கழகத்திலும் தமிழ் இருக்கை அமைக்கும் முயற்சி 2 ஆண்டுகளுக்கு முன்பே ஆரம்பமாகி முன்னேற்றம் கண்டிருக்கிறது.
இதற்கு தேவையான வைப்புநிதி 3 மில்லியன் டாலரில், அங்கே உள்ள தமிழ் மக்கள் ஏற்கெனவே 2.44 மில்லியன் டாலர் திரட்டிவிட்டனர். இந்திய மதிப்பில் ரூ.3.2 கோடி மட்டுமே இன்னும் தேவைப்படுகிறது. ஹார்வர்டுக்கு ரூ.10 கோடி வழங்கிய தமிழக அரசு இந்த பெருமுயற்சிக்கு தேவைப்படும் மீதி நிதியை கொடையாக வழங்க வேண்டும்.
டொரான்டோ பல்கலைக்கழகத்தில் அமையும் தமிழ் இருக்கை, தமிழுக்கான ஆராய்ச்சிகளை உயரிய முறையில் நடத்தி, தமிழின் தொன்மை, பெருமையை நிலைநாட்டுவதோடு, உலகின் பல்வேறு தமிழ் ஆய்வுகளை சுதந்திரமாக முன்னெடுக்கும் மையப் புள்ளியாகவும் செயல்படும் என்பதில் ஐயமில்லை. இதற்கு கிடைக்கும் வெற்றி தமிழக அரசுக்கும், தமிழ் மக்களுக்கும் கிடைக்கும் வெற்றி.
இவ்வாறு கமல்ஹாசன் தெரி வித்துள்ளார்.