மீட்கப்பட்ட சாமி சிலைகள். 
தமிழகம்

பேரூர் பெரியகுளத்தில் 7 சாமி சிலைகள் மீட்பு

செய்திப்பிரிவு

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயிலில் இருந்து புட்டுவிக்கி சுண்டக்காமுத்தூர் சாலைக்கு செல்லும் வழியில் பேரூர் பெரிய குளம் உள்ளது. இக்குளத்தின் அருகே நேற்று காலை நடைப்பயிற்சி மேற்கொண்டிருந்த ஒருவர், குளத்தில் சாமி சிலைகள் கிடப்பதைப் பார்த்து, போலீஸாருக்குத் தகவல் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து, சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸார் மற்றும் பேரூர் வட்டாட்சியர் அலுவலக அதிகாரிகள் அங்கு சென்று, ஒன்றரை அடி உயரம் கொண்ட விஷ்ணு துர்க்கை, மகாலட்சுமி, கருமாரியம்மன் ஆகிய சிலைகளையும், சிறிய அளவிலான விநாயகர், சரஸ்வதி சிலைகளையும், கல்லால் செய்யப்பட்ட கருமாரியம்மன் சிலையையும் மீட்டு, பேரூர் துணை வட்டாட்சியரிடம் ஒப்படைத்தனர்.

உலோகத்தாலான மகாலட்சுமி சிலை 9.09 கிலோ, துர்க்கையம்மன் சிலை 8.81 கிலோ, கருமாரியம்மன் சிலை 4.68 கிலோ, சரஸ்வதி சிலை 592 கிராம், கிருஷ்ணர் சிலை 176 கிராம், விநாயகர் சிலை 846 கிராம் எடை கொண்டவையாக இருந்தன.

இதுகுறித்து சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸார் கூறும்போது, ‘‘குளத்தில் மீட்கப் பட்டவை ஐம்பொன் சிலைகள் கிடையாது. வெண்கலத்திலான சிலைகளாக இருக்க வாய்ப் புள்ளது. மர்மநபர்கள் அம்மன் கோயில்களில் இந்த சிலைகளைத் திருடி, சில நாட்கள் கழித்து மீண்டும் எடுப்பதற்காக குளத்தில் போட்டிருக்க வாய்ப்புள்ளது. சிலைகள் செய்து சுமார் மூன்று ஆண்டுகளாகியிருக்கலாம். இது தொடர்பாக தொடர்ந்து விசாரித்து வருகிறோம்" என்றனர்.

SCROLL FOR NEXT