புதுச்சேரி சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை சார்பில் ஆட்டோ மூலம் டெங்கு மற்றும் சிக்கன்குனியா விழிப்புணர்வு பிரச்சாரம் தொடங்கி வைப்பு.
புதுச்சேரி: புதுச்சேரியில் நடப்பாண்டு இதுவரை 637 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும், உயிரிழப்பு எதுவும் இல்லை என்றும் சுகாதாரத்துறை இயக்குநர் செவ்வேள் தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை சார்பில் ஆட்டோ மூலம் டெங்கு மற்றும் சிக்கன்குனியா விழிப்புணர்வு பிரச்சாரம் அனைத்து ஆரம்ப சுகாதார நிலையம், சமுதாய நலவழி மையங்கள்,நகர சுகாதார மையங்கள் உள்ள கிராமங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்த ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
மேலும் எப்எம் ரேடியோக்கள், திரையரங்குகள் மற்றும் கேபிள் டிவிகள் மூலம் மக்கள் மத்தியில் விழிப்புணர்வு விளம்பரம் செய்யப்பட இருக்கிறது. இந்நிலையில் இன்று சுகாதார இயக்குநரக வளாகத்தில் நடந்த டெங்கு மற்றும் சிக்கன்குனியா விழிப்புணர்வு பிரச்சார ஆட்டோ வாகனங்களை சுகாதாரத்துறை இயக்குநர் செவ்வேள் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
இதற்கான ஏற்பாடுகளை துணை இயக்குநர் (செய்தி, கல்வி மற்றும் தொடர்பு பிரிவு) ரகுநாதன் செய்தார். இந்நிகழ்ச்சியில் துணை இயக்குநர் (பொது சுகாதாரம்) உமாசங்கர், உதவி இயக்குநர் (தேசிய கொசு மற்றும் பூச்சுகளால் பரவும் நோய்த்தடுப்பு பிரிவு) முருகன் மற்றும் மலேரியா தொழில்நுட்ப பிரிவு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
இதுகுறித்து சுகாதாரத்துறை இயக்குநர் செவ்வேள் கூறும்போது, புதுச்சேரியில் மழைக்காலம் தொடங்க உள்ள நிலையில், பொதுமக்கள் தங்கள் வீடுகளிலும் சுற்றுப்புறங்களிலும் டெங்கு காய்ச்சல் பரவுவதை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
மழைநீரானது வீட்டை சுற்றி வீணாகக் கிடக்கும் பயன்படுத்தப்படாத டயர்கள், உடைந்த பாத்திரங்கள், பிளாஸ்டிக் கப்புகள், தேங்காய் ஓடுகள் மற்றும் சிமெண்ட் தொட்டிகள் போன்ற பொருட்களில் தேங்குவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளன. இதுபோல் தேங்கி நிற்கும் தூய்மையான நீரில் தான் டெங்கு காய்ச்சலை பரப்பக்கூடிய ஏடிஸ் கொசுக்கள் மிக அதிவேகமாக இனப்பெருக்கம் செய்கின்றன.
புதுச்சேரி முழுவதும், இந்த ஆண்டு ஜனவரி முதல் இன்று வரை 637 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், சுகாதாரத்துறை மேற்கொண்ட தீவிர டெங்கு தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளின் காரணமாக, இந்த ஆண்டு புதுச்சேரி முழுவதும் டெங்கு உயிரிழப்புகள் எதுவும் பதிவாகவில்லை.
கொசுக்கள் உற்பத்தியாவதை தடுத்து, டெங்கு பாதிப்பு ஏற்படுவதை தடுத்து டெங்கு இல்லாத புதுச்சேரியை உருவாக்க பொதுமக்கள் அனைவரும் தங்கள் வீட்டை மட்டுமின்றி சுற்றுப்புறத்தையும் தூய்மையாக வைத்துக்கொண்டு, அரசு எடுக்கும் நோய் தடுப்பு நடவடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்பு நல்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.