திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில் நரசிம்மர் பிரம்மோற்சவ நிகழ்ச்சியின் தொடக்கமாக ஏற்றப்பட்ட கொடியேற்றம். | கோப்புப் படம்: க.ஸ்ரீபரத். 
தமிழகம்

திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் நரசிம்மருக்கு மார்ச் 2-ல் பிரம்மோற்சவம் தொடக்கம்

செய்திப்பிரிவு

திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோயிலில் நரசிம்மருக்கு பிரம்மோற்சவ விழா வரும் மார்ச் 2-ம் தேதி தொடங்குகிறது. விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் மார்ச் 8-ம் தேதி நடைபெற உள்ளது.

சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில் 108 திவ்ய தேசங்களில் ஒன்றாகும். பிரசித்தி பெற்ற இக்கோயிலில் ஆண்டுதோறும் பார்த்தசாரதி சுவாமிக்கு சித்திரை மாதமும், நரசிம்மருக்கு ஆனி மாதமும் பிரம்மோற்சவம் நடைபெறுவது வழக்கம். கடந்த ஆண்டு கரோனா வைரஸ் பரவல் காரணமாக இத்திருவிழாக்கள் தள்ளிவைக்கப்பட்டன.

கடந்த ஆண்டு தள்ளி வைக்கப்பட்ட பிரம்மோற்சவ விழா தற்போது நடத்தப்பட்டு வருகிறது. இதன்படி, பார்த்தசாரதி சுவாமிக்கு கடந்த 3-ம் தேதி முதல் 12-ம் தேதி வரை பிரம்மோற்சவ விழா மிக சிறப்பாக நடைபெற்றது. இதன் தொடர்ச்சியாக, நரசிம்மருக்கு மார்ச் 2-ம் தேதி பிரம்மோற்சவ விழா தொடங்கி மார்ச் 11-ம் தேதி நிறைவடையும்.

இதன்படி, திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் பிரம்மோற்சவ விழா மார்ச் 2-ம் தேதி அதிகாலை 5.30 மணியளவில் கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. மார்ச் 4-ம் தேதி அதிகாலை 5.30 மணிக்கு கருடசேவை, மார்ச் 7-ல் ஏகாந்த சேவை நடைபெறும்.

விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் மார்ச் 8-ம் தேதி நடைபெற உள்ளது. அன்றைய தினம் காலை 5 மணியளவில் நரசிம்மர் திருத்தேரில் எழுந்தருள உள்ளார். இதைத் தொடர்ந்து, காலை7 மணிக்கு தேரோட்டம் நடைபெற உள்ளது. மார்ச் 11-ம் தேதி இரவு9 மணிக்கு சப்தாவர்ணம் எனும்சிறிய திருத்தேர் நிகழ்வுடன் பிரம்மோற்சவ விழா நிறைவடையும்.

SCROLL FOR NEXT