தருமபுரி-கிருஷ்ணகிரி சாலையில் விபத்துகளை தடுக்க அங்கு மத்திய தடுப்புச்சுவர் மற்றும் வேகத்தடை அமைக்க வேண்டும் என பொதுமக்கள், மாவட்ட ஆட்சி யரிடம் மனு அளித்தனர்.
திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் கூட்டரங்கில் மக்கள் குறைதீர்வுக்கூட்டம் நேற்று நடை பெற்றது. மாவட்ட வருவாய் அலுவலர் தங்கைய்யாபாண்டியன் முன்னிலை வகித்தார். மாவட்ட ஆட்சியர் சிவன் அருள் தலைமை வகித்தார். இதில், 212 பொதுநல மனுக்களை மாவட்ட ஆட்சியர் சிவன் அருள் மற்றும் அரசு அதி காரிகள், பொதுமக்களிடம் இருந்து பெற்றுக்கொண்டனர்.
திருப்பத்தூர் நகரம் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் குடியிருப்புப் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் அளித்த மனுவில், ‘‘தருமபுரி-கிருஷ்ணகிரி பிரதான சாலையையொட்டி தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்புப் பகுதி உள்ளது. காந்தி சிலை ரவுண்டானா பகுதியில் அடிக்கடி சாலை விபத்துகளும், உயிரிழப்புகளும் ஏற்படுகின்றன.
இதை தடுக்க சாலையின் நடுவில் தடுப்புச்சுவர் உடனடியாக அமைக்க வேண்டும். மேலும், வேகத்தடை, சோடியம் மின் விளக்குகள் ஏற்படுத்த வேண்டும்’’ என தெரிவித்திருந்தனர்.
திருப்பத்தூர் அண்ணாநகர் பகுதியைச் சேர்ந்த மூன்றாம் பாலினத்தை சேர்ந்த கற்பகம் தலைமையில் 20-க்கும் மேற்பட்ட மூன்றாம் பாலினத்தவர்கள் அளித்த மனுவில், ‘‘அண்ணாநகர் பகுதியில் 50-க்கும் மேற்பட்ட மூன்றாம் பாலினத்தவர்கள் வாடகை வீட்டில் வசித்து வருகிறோம். கடந்த பல ஆண்டுகளாக வீட்டுமனைப் பட்டா கேட்டு மனு அளித்து வருகிறோம். எனவே, எங்களின் நிலை கருதி இலவச வீட்டுமனைப் பட்டா வழங்க வேண்டும்’’ என தெரி வித்திருந்தனர்.
நாட்றாம்பள்ளி வட்டம் சண்டியூர் கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் அளித்த மனுவில், ‘‘எங்கள் பகுதியில் கால்வாயில் இருந்து வெளியேறும் கழிவுநீர் விவசாய நிலத்தில் குட்டைப்போல் தேங்குகிறது. இதனால், விவசாய நிலம் பாழாகிறது. மேலும், ஆழ்துளைக் கிணறுகளில் கழிவுநீர் கலப்பதால் சுகாதாரமற்ற குடிநீரை அருந்தும் நிலை உருவாகியுள்ளது. எனவே, கழிவுநீர் கால்வாய் அமைத்து கழிவுநீர் சீராக செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என தெரிவித்திருந்தனர்.
வாணியம்பாடி வட்டம் அலசந்தாபுரம் கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் அளித்த மனுவில், ‘‘அம்பலூர் அடுத்த அலசந்தாபுரம் பகுதியில் இந்து ஆதிதிராவிடர் வகுப்பைச் சேர்ந்த 120-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் பல ஆண்டுகளாக வசித்து வருகிறோம். எங்கள் பகுதிக்கு அருகாமையில் அரசுக்கு சொந்தமான நத்தம் புறம்போக்கு இடம் உள்ளது. அங்கு வீடு கட்டி வசிக்க இலவச வீட்டுமனைப் பட்டாக்களை எங்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என தெரிவித்திருந்தனர்
இந்நிகழ்ச்சியில், 3 மாற்றுத் திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டையை மாவட்ட ஆட்சியர் சிவன் அருள் வழங்கினார். இதில், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் மகேஷ்பாபு, துணை ஆட்சியர் பானுமதி உட்பட பலர் கலந்து கொண்டனர்.