வேலூரில் நேற்று திமுக ஆர்ப்பாட்டத்தில் மாவட்டச் செயலாளர் நந்தகுமார் தலைமையில் காஸ் சிலிண்டருக்கு மாலை அணிவித்து பெண்கள் ஒப்பாரி வைத்து அழுதனர். படம்:வி.எம்.மணிநாதன். 
தமிழகம்

பெட்ரோல், டீசல் மற்றும் காஸ் விலை உயர்வை கண்டித்து திமுகவினர் ஒப்பாரி வைத்து நூதன ஆர்ப்பாட்டம்

செய்திப்பிரிவு

பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு எதிராக வேலூரில் திமுகவினர் ஒப்பாரி வைத்து நூதன முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதேபோல, ராணிப்பேட்டை மற்றும் திருப்பத்தூரிலும் ஆர்ப் பாட்டம் நடைபெற்றது.

பெட்ரோல், டீசல், காஸ் சிலிண்டர் விலை உயர்வுக்கு எதிராக, தமிழகத்தில் திமுக சார்பில் மாவட்ட தலைநகரங்களில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதன்படி, வேலூர் அண்ணா கலையரங்கம் அருகே வேலூர் மத்திய மாவட்ட திமுக சார்பில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்டச் செயலாளரும் அணைக்கட்டு சட்டப்பேரவை உறுப்பினருமான ஏ.பி.நந்தகுமார் தலைமை தாங்கினார். நாடாளுமன்ற உறுப்பினர் கதிர் ஆனந்த், வேலூர் மாநகர செயலாளரும் வேலூர் சட்டப் பேரவை உறுப்பினருமான கார்த்தி கேயன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.

ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற வர்கள் பெட்ரோல், டீசல், காஸ் சிலிண்டர் விலை உயர்வுக்கு எதிராக கண்டன முழக்கமிட்டனர். ஆர்ப்பாட்ட மேடையின் இரண்டு பக்கமும் ஆம்னி கார், இரு சக்கர வாகனம், காஸ் சிலிண்டரை கிரேனில் கட்டி தொங்க விட்டிருந் தனர். மேலும், ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற திமுக மகளிரணியினர் ஒப்பாரி வைத்து நூதன முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ராணிப்பேட்டை

ராணிப்பேட்டை முத்துக்கடை பேருந்து நிலையம் அருகே நடை பெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்டச் செயலாளரும் ராணிப்பேட்டை சட்டப்பேரவை உறுப்பினருமான ஆர்.காந்தி தலைமை தாங்கினார். முன்னாள் மத்திய இணை அமைச்சரும் அரக்கோணம் நாடாளுமன்ற உறுப்பினருமான ஜெகத்ரட்சகன், ஆற்காடு சட்டப்பேரவை உறுப் பினர் ஜெ.எல்.ஈஸ்வரப்பன் உள் ளிட்டோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் பெட்ரோல், டீசல், காஸ் சிலிண்டர் விலை உயர்வுக்கு எதிராக முழக்க மிட்டனர்.

திருப்பத்தூர்

திருப்பத்தூர் வட்டாட்சியர் அலுவலகம் அருகே நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்டப் பொறுப்பாளர் தேவராஜி தலைமை வகித்தார். முன்னதாக நகரச்செயலாளர் ராஜேந்திரன் வரவேற்றார். திருப்பத்தூர் சட்டப்பேரவை உறுப்பினர் நல்லதம்பி ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்துப் பேசும்போது, "மத்திய அரசு ஏழை மக்களை வஞ்சிக்கும் வகையில் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலையை தொடர்ந்து உயர்த்தி வருகிறது. இதனால், அத்தியாவசியப் பொருட்களின் விலையும் உயர்ந்து காணப்படுகிறது. இதை தமிழக அரசும் கண்டும், காணாமல் உள்ளது’’ என்றார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் முன் னாள் மாவட்ட பொறுப்பாளர் முத்தமிழ்செல்வி, மாவட்ட துணைச்செயலாளர்கள் ஜோதி ராஜன், சம்பத்குமார், சர்மிளா, மாவட்டப் பொருளாளர் ரகுநாத் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

SCROLL FOR NEXT