தமிழகம்

21 பேர் உயிரிழந்த சம்பவம்: விருதுநகரில் பட்டாசு ஆலை நலக் குழுக் கூட்டத்தில் பத்திரிகையாளர்களுக்கு அனுமதி மறுப்பு

இ.மணிகண்டன்

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் வெடிவிபத்து ஏற்பட்டு 21 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக அமைச்சர் கே‌.டி.ராஜேந்திர பாலாஜி தலைமையில் பட்டாசு ஆலை உரிமையாளர்கள் நலக் குழு கூட்டம் இன்று மாலை நடைபெற்றது.

இக்கூட்டத்திற்கு பத்திரிகையாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

சாத்தூர் அருகே உள்ள அச்சங்குளத்தில் கடந்த 12ஆம் தேதி ஏற்பட்ட வெடி விபத்தில் 21 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். இதையடுத்து விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பால்வளத்துறை அமைச்சர் கே‌.டி. ராஜேந்திரபாலாஜி தலைமையில் மாவட்டத்தில் இயங்கி வரும் பட்டாசு தொழிற்சாலை உரிமையாளர்களுடன் நடைபெறும் நல குழுக் கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் பேசுகையில், விருதுநகர் மாவட்டத்தில் கடந்த 2010 ஆம் ஆண்டு முதல் தற்போது வரை 204 விபத்துகள் ஏற்பட்டுள்ளன.

இதில், 298 பேர் உயிரிழந்துள்ளனர். 236 பேர் காயமடைந்துள்ளனர். பட்டாசு ஆலைகளில் அவ்வப்போது ஆய்வு நடத்தி எச்சரிக்கையை விடுத்து வருகிறோம். விதி மீறல்கள் காரணமாகவே விபத்துக்கள் ஏற்படுகின்றன என்றார்.

அதைத்தொடர்ந்து கூட்ட அரங்கில் மைக்கை அணைத்துவிட்டு பத்திரிகையாளர்களை கூட்டத்திலிருந்து வெளியே அனுப்ப அதிகாரிகளுக்கு மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார்.

அதையடுத்து அரங்கில் இருந்த அனைத்து பத்திரிகையாளர்களும் வெளியேற்றப்பட்டனர்.

இதனால் பட்டாசு ஆலை நிர்வாகிகளுடன் நடக்கும் கலந்துரையாடல் கூட்டத்தில் தங்களது பிரச்சினைகளை எடுத்துக் கூற வந்த பட்டாசு ஆலை நிர்வாகிகள் அதிருப்தி அடைந்தனர்.

அரசுத் துறை சார்ந்த கூட்டம் மட்டுமல்லாது பட்டாசு ஆலை நிர்வாகிகள் உடனான கருத்து கேட்புக் கூட்டத்திற்கு பத்திரிகையாளர்கள் அனுமதிக்கப்படாதது கூட்டத்தில் பங்கேற்ற அவர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் இக்கூட்டத்தில் மேடையில் அமர்ந்திருந்த மாவட்ட ஆட்சியர் கண்ணனுக்கு முன்னர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் என பெயர்ப் பலகை வைக்கப்பட்டிருந்தது கூட்டத்தில் சலசலப்பை ஏற்படுத்தியது.

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற பட்டாசு தொழிற்சாலை உரிமையாளர்களுடன் நடைபெறும் நல குழுக் கூட்டத்தில் பெயர் பலகை மாற்றப்பட்டு இருக்கையில் அமர்ந்திருக்கும் மாவட்ட ஆட்சியர் இரா.கண்ணன். அருகில் பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி.

SCROLL FOR NEXT