புதுச்சேரியில் இதுவரை ஆறு முறை ஆட்சிக் கவிழ்ப்பு நடந்துள்ளது. அதேபோல மூன்று முறை முதல்வர் மாற்றம் நடந்துள்ளது.
புதுச்சேரி அரசியல் சற்றே விநோதமானது. கட்சிகள் எல்லாவற்றையும் தாண்டி, தனிநபர் அடையாளமும் இங்கு மிக முக்கியம். யூனியன் பிரதேசமாக இருப்பதால் புதுச்சேரி இன்னும் மத்திய அரசின் கட்டுப்பாட்டில்தான் உள்ளது. மாநிலத்துக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும் பல விஷயங்களில் இடைவெளி உள்ளது.
குறிப்பாக புதுச்சேரியில் அக்காலத்தில் ஆட்சிக் கவிழ்ப்பு, கட்சி மாற்றம் என்பது சர்வசாதாரணமாக இருந்தது. இதுவரை ஆதரவு தந்த கட்சிகள், எம்எல்ஏக்கள் வாபஸ் பெற்றதால் ஆட்சிகள் கவிழ்ந்துள்ளன. இம்முறை சொந்தக் கட்சியில் எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ததால் ஆட்சி கவிழ்வது இதுவே முதல்முறை.
இதுவரை புதுச்சேரியில் நடந்த ஆட்சிக் கவிழ்ப்பு நிகழ்வுகள்: ஒரு பார்வை
1. 1969 முதல் 73 வரையிலான காலத்தில் இந்திய கம்யூனிஸ்ட் ஆதரவுடன் திமுக ஆட்சியில் இருந்தது. அப்போது கம்யூனிஸ்ட் தனது ஆதரவை விலக்கிக் கொண்டதால் பாரூக் மரைக்காயர் தலைமையிலான ஆட்சி கவிழ்ந்தது.
2. 1974-ல் அதிமுக ஆட்சியில் ராமசாமி முதல்வராகப் பதவியேற்றார். அரசுக்குத் தனிப் பெரும்பான்மை இல்லாத நிலையில் சட்டப்பேரவையில் பட்ஜெட் தாக்கல் செய்வதில் பிரச்சினை ஏற்பட்டு 21 நாளில் ஆட்சி கவிழ்க்கப்பட்டது.
3. 1977ல் காங்கிரஸ் (எஸ்) ஆதரவுடன் அதிமுகவைச் சேர்த ராமசாமி முதல்வராக இருந்தார். ஒரு வருடத்தில் அதிமுகவுக்கு அளித்த ஆதரவை காங்கிரஸ் (எஸ்) வாபஸ் பெற்றதால் ஆட்சி கவிழ்ந்தது. அதன்பிறகு 1980 வரை குடியரசுத் தலைவர் ஆட்சி அமலில் இருந்தது.
4. 1980 முதல் 83 வரையிலான காலத்தில் காங்கிரஸ் ஆதரவுடன் திமுக ஆட்சியில் இருந்தது. டி.ராமச்சந்திரன் முதல்வராக இருந்தார். அப்போது தென் மாநில முதல்வர் மாநாட்டில் பங்கேற்கும் விவகாரத்தில் இரு கட்சிக்கும் கருத்து வேறுபாடு ஏற்படவே, காங்கிரஸ் தனது ஆதரவை விலக்கியதால் ஆட்சி கவிழ்ந்தது.
5. 1990-ல் ஜனதா தளம் ஆதரவுடன் திமுக ஆட்சி நடந்தது. முதல்வராக டி.ராமச்சந்திரன் இருந்த நிலையில் ஓராண்டில் ஜனதா தளம் தனது ஆதரவை விலக்கியது. இதனால் அவரது ஆட்சி கவிழ்ந்தது. 1991 முதல் வைத்திலிங்கம் முதல்வராகப் பதவியேற்றார்.
6. முதல்வர் நாராயணசாமி தலைமையிலான அரசு 2016-ல் பதவியேற்று இறுதியாண்டைப் பூர்த்தி செய்ய இருந்த நிலையில் அக்கட்சி எம்எல்ஏக்கள் ஒவ்வொருவராக ராஜினாமா செய்ததால் பெரும்பான்மை இல்லாமல் நாராயணசாமி ஆட்சியை இழந்துள்ளார். தற்போது வரை புதுவையில் 6 முறை ஆட்சிக் கவிழ்ப்பு நடந்துள்ளது.
மூன்று முறை முதல்வர் மாற்றம்
புதுச்சேரியில் 3 முறை முதல்வர் மாற்றம் நடந்துள்ளது. 1996-ல் திமுக, தமாகா, கம்யூனிஸ்ட் கூட்டணியில் ஜானகிராமன் (திமுக) முதல்வராக இருந்தார். இந்த அமைச்சரவையில் திமுக விலகியதால் காங்கிரசில் சண்முகம் முதல்வராக இருந்தார்.
2001-ல் காங்கிரஸில் முதல்வராக சண்முகம் இருந்தார். அவர் போட்டியிட யாரும் தொகுதியை விட்டுக் கொடுக்காத நிலையில் அதன்பிறகு அவர் ராஜினாமா செய்யவே முதல்வராக ரங்கசாமி பதவியேற்றார்.
பின்னர் 2006-ல் வெற்றிபெற்று முதல்வராக ரங்கசாமி தொடர்ந்த நிலையில், நமச்சிவாயம், கந்தசாமி உள்ளிட்ட சிலர் அவருக்கு எதிராகக் காங்கிரஸில் போர்க்கொடி தூக்கவே, முதல்வர் பதவியிலிருந்து ரங்கசாமி நீக்கப்பட்டார். புதிய முதல்வராக வைத்திலிங்கம் பதவியேற்றார்.