புதுச்சேரியில் ஜனநாயகப் படுகொலை நடைபெற்றுள்ளதாக, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில நிர்வாகக்குழுக் கூட்டம் இன்று (பிப். 22) சென்னையில் உள்ள மாநிலக் கட்சி அலுவலகத்தில் டி.மணிவாசகம் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் மூத்த தலைவர் இரா.நல்லகண்ணு, மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன், நாடாளுமன்ற உறுப்பினர்கள் கே.சுப்பராயன், எம்.செல்வராசு, தேசிய நிர்வாகக்குழு உறுப்பினர் சி.மகேந்திரன், துணைச் செயலாளர் மு.வீரபாண்டியன், பொருளாளர் எம்.ஆறுமுகம் உட்பட நிர்வாகக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம்:
"எதிர்க்கட்சிகள் அதிகாரத்தில் உள்ள மாநிலங்களில் குறுக்குவழியில் நுழைந்து ஜனநாயக விரோத முறையில் அதிகாரத்தைக் கைப்பற்றி வருவதன் தொடர்ச்சியாக பாஜக புதுச்சேரியிலும் சட்டவிரோதச் செயலில் ஆதாயம் தேடி தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டப்பேரவை உறுப்பினர்களை விலைகொடுத்து வாங்கிவிட்டது.
புதுச்சேரியில் காங்கிரஸ் அரசை வீழ்த்திவிட ஆளுநர் மாளிகை வழியாக பல்வேறு அரசியல் சதிவேலைகளை தொடர்ந்து அரங்கேற்றி வந்தது. தற்போது மக்களால் தேர்வு செய்யப்பட்ட ஆட்சியை செயல்படவிடாமல் முடக்குவதில் வெற்றி பெற்று விட்டது.
அரசியலமைப்பு சட்டத்தின் அடிப்படைகளை தகர்த்து, மக்கள் உணர்வுகளை நிராகரித்து, ஜனநாயக நெறிமுறைகளை சிறுமைப்படுத்தி மத்திய பாஜக அரசு புதுச்சேரியில் அரங்கேற்றியுள்ள ஜனநாயகப் படுகொலையை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில நிர்வாகக்குழு வன்மையாகக் கண்டிக்கிறது.
பாஜகவின் ஜனநாயக விரோத, அதிகார அத்துமீறலுக்கு எதிராக ஜனநாயக சக்தி ஒருமுகமாகத் திரண்டு போராடி முறியடிக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறது".
இவ்வாறு அக்கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.