இளைஞர்கள் புதிதாகக் கட்சியில் சேருவார்கள் என்றால் அது பாஜகவில் மட்டும்தான் என்று அக்கட்சியின் மாநிலத் தலைவர் எல்.முருகன் பெருமிதம் தெரிவித்துள்ளார்.
தமிழக பாஜக இளைஞரணி சார்பில் மாநில மாநாடு சேலம் கெஜ்ஜல்நாயக்கன்பட்டியில் நேற்று நடந்தது. தமிழக சட்டப்பேரவைக் கட்டிட வடிவிலான மேடை அமைக்கப்பட்டிருந்தது. மாநில இளைஞரணித் தலைவர் வினோஜ் செல்வம் தலைமை வகித்தார்.
இளைஞரணி தேசியத் தலைவர் தேஜஸ்வி சூர்யா, பாஜக மாநிலத் தலைவர் எல்.முருகன், துணைத் தலைவர்கள் துரைசாமி, அண்ணாமலை, முன்னாள் தேசியச் செயலாளர் ஹெச்.ராஜா, பொதுச் செயலாளர்கள் ராகவன், நயினார் நாகேந்திரன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராகப் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பங்கேற்றார்.
விழாவில் பேசிய பாஜக மாநிலத் தலைவர் எல்.முருகன் கூறியதாவது:
''எங்களுக்கு முன்னால் வந்து நிற்கும் இளைஞர்களின் கூட்டம், தமிழக அரசியலில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும். எதற்கும் தயங்காத இந்த இளைஞர்கள் கூட்டம் இருக்கும் வரை தமிழக பாஜக மிகப்பெரிய வீர நடை போட்டு நடக்கும் என்பதில் எந்தவித ஐயமும் இல்லை. நூறு இளைஞர்களைக் கொடுங்கள், இந்த தேசத்தையே மாற்றிக் காட்டுகிறேன் என்று விவேகானந்தர் சொன்னார். ஆனால், இன்று தமிழகத்தில் லட்சக்கணக்கான இளைஞர்கள் பாஜகவுக்கு வந்திருக்கிறார்கள். இவர்கள் தமிழக அரசியலில் மாபெரும் மாற்றத்தை ஏற்படுத்துவார்கள் என்ற நம்பிக்கை மக்களிடத்தில் ஏற்பட்டுள்ளது.
ஆற்றல் மிக்க தலைவர் மோடியின் ஆட்சி, வழிகாட்டுதல் தமிழகத்துக்கும் வேண்டும் என்று நினைத்தே இளைஞர்கள் இங்கு குவிந்திருக்கிறார்கள். இளைஞர்கள் புதிதாகக் கட்சியில் சேருவார்கள் என்றால் அது பாஜகவில் மட்டும்தான்.
நாம் மிகப்பெரிய வெற்றி அடைந்திருக்கிறோம். கந்த சஷ்டி கவசத்தை அவமதித்தார்கள். அவர்களைக் கண்டித்து நாம் வெற்றிவேல் யாத்திரை நடத்தினோம். நாம் யாத்திரை நடத்தக் கூடாது என்று திமுகவும், அதன் கூட்டணிக் கட்சிகளும் காவல்துறையிடம் மனு கொடுத்தன. ஆனால், நமது யாத்திரை வெற்றி அடைந்தது.
நாம் எந்த இடத்தில் யாத்திரையைத் தொடங்கினோமோ அதே இடத்தில், அதே திருத்தணியில், அதே தை கிருத்திகை அன்று ஸ்டாலின் வேலைத் தூக்கி வைத்தார். நமது யாத்திரை வெற்றி அடையக் காரணம் இளைஞர் சக்தி. வாருங்கள் இளைஞர்களே, தமிழக அரசியலில் மாற்றத்தை ஏற்படுத்துவோம்''.
இவ்வாறு எல்.முருகன் பேசினார்.