தமிழகம்

பெரும்பான்மையை நிரூபிப்பாரா நாராயணசாமி? இப்படி நடக்க வாய்ப்புள்ளது

செய்திப்பிரிவு

புதுச்சேரியில் அடுத்தடுத்த நிகழ்வுகள் காரணமாக சட்டப்பேரவை உறுப்பினர்கள் காங்கிரஸை விட்டு வெளியேறிவரும் நிலையில், சற்று நேரத்தில் சட்டப்பேரவை கூடும் நிலையில், அடுத்து என்ன நடக்கும் என்னென்ன வாய்ப்புகள் உள்ளன என்பதுதான் தற்போதுள்ள பிரச்சினை.

புதுச்சேரியில் காங்கிரஸ்-திமுக கூட்டணி அரசு ஆட்சி நடத்துகிறது. முதல்வராக ஆவார் என எதிர்பார்க்கப்பட்ட நமச்சிவாயம், கடைசி நேரத்தில் நாராயணசாமி வரவால் இலவு காத்த கிளியானார். அதுமுதல் புதுவை காங்கிரஸில் குழப்பமே மிஞ்சியது. கிரண்பேடி துணைநிலை ஆளுநரானவுடன் அரசுக்கும், துணைநிலை ஆளுநருக்கும் மோதல் அதிகரித்தது.

30 எம்எல்ஏக்கள் கொண்ட புதுவையில் காங்கிரஸ்- திமுக கூட்டணி 18 இடங்களிலும், ஒரு சுயேச்சை எம்எல்ஏ ஆதரவையும் சேர்த்து 19 சட்டப்பேரவை உறுப்பினர்கள் ஆதரவுடன் ஆட்சியில் அமர்ந்தது. ரங்கசாமியின் என்.ஆர்.காங்கிரஸ் சார்பில் 7 எம்எல்ஏக்கள், அதிமுக சார்பில் 4 எம்எல்ஏக்கள் என 11 பேர் இருந்தனர். நியமன எம்எல்ஏக்கள் மூவரும் பாஜகவைச் சேர்ந்தவர்கள் என எதிர்க்கட்சி வரிசையில் மொத்தம் 14 பேர் இருந்தனர்.

இந்நிலையில் பல்வேறு பிரச்சினைகள் காரணமாக 5 காங்கிரஸ் எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்தனர். முக்கியத் தளபதியான நமச்சிவாயமே காங்கிரஸ் கட்சியை விட்டு பாஜகவிற்குத் தாவினார். 25 எம்எல்ஏக்கள், நியமன எம்எல்ஏக்கள் 3 பேர் சேர்ந்து 28 பேருடன் சட்டப்பேரவை தொடர்ந்தது. இந்நிலையில் கிரண்பேடி மாற்றப்பட்டு தமிழிசை சவுந்தரராஜன் துணைநிலை ஆளுநரானார். அவர் நாராயணசாமியை பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிட்டார்.

28 பேர் உள்ள நிலையில் அதில் 15 பேர் இருந்தால் பெரும்பான்மை என்கிற நிலையில் நாராயணசாமிக்கு 14 பேரின் ஆதரவு இருந்தது. இந்நிலையில் போதிய பெரும்பான்மை உள்ளது, சட்டப்பேரவையில் நிரூபிப்போம் என அவர் அறிவித்திருந்தார். ஆனால், நேற்று மாலை திடீரென காங்கிரஸ் எம்எல்ஏ ரங்கசாமி, ராஜ்பவன் தொகுதி எம்எல்ஏ லட்சுமி நாராயணன், தட்டாஞ்சாவடி திமுக எம்எல்ஏ வெங்கடேசன் ஆகியோர் ராஜினாமா செய்தனர்.

இதனால் நாராயணசாமி அமைச்சரவை கவிழ்வது நிச்சயம் என்கிற நிலை ஏற்பட்டுள்ளது. திமுக உறுப்பினரே ராஜினாமா செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இன்று சட்டப்பேரவையில் நாராயணசாமி முன் மூன்று வாய்ப்புகள் உள்ளன. நியமன எம்எல்ஏக்களைக் கணக்கில் எடுத்துக்கொள்ள மாட்டோம் என சபாநாயகர் முடிவெடுத்தால் எதிர்க்கட்சி வரிசையில் 11 பேரும், ஆளுங்கட்சி வரிசையில் சபாநாயகருடன் சேர்ந்து 12 பேரும் உள்ளதால் ஆட்சி தப்பிக்கும்.

அடுத்து சட்டபேரவை கூடியதும் நம்பிக்கை வாக்கெடுப்பின் மீது முதல்வர் நாராயணசாமி பேசி ராஜினாமா செய்யலாம்.

மூன்றாவது நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தி அதன் மீது உறுப்பினர்கள் வாக்கெடுப்பு நடத்தி ஆட்சி கவிழ்ந்து ரங்கசாமி ஆட்சி அமைக்க உரிமை கோரலாம். முதல்வர் நாராயணசாமி தலைமையில் அனைவரும் ராஜினாமா செய்தால், அடுத்து சில மாதங்களே தேர்தலுக்கு உள்ள நிலையில் அடுத்த ஆட்சி அமைக்கத் துணைநிலை ஆளுநர் அழைக்க வாய்ப்பில்லை.

இன்று நாராயணசாமி என்ன முடிவெடுக்க உள்ளார் என்பதைப் பொறுத்தே அடுத்த நிகழ்வுகளை நோக்கி புதுச்சேரி நிகழ்வுகள் இருக்கும்.

SCROLL FOR NEXT