சென்னையில் உள்ள ராணுவ தென் பிராந்திய அலுவலக சுற்றுச்சூழல் பூங்காவில் நேற்று நடந்த தொடர் ஓட்டத்தை, தமிழக தலைமைச் செயலர் ராஜீவ் ரஞ்சன் மூவர்ண பலூன்களை பறக்கவிட்டு தொடங்கிவைத்தார். உடன் இந்திய ராணுவத்தின் தென் பிராந்திய கமாண்டிங் அதிகாரி லெஃப்டினன்ட் ஜெனரல் ஏ.அருண் உள்ளிட்டோர்.படம்: க.ஸ்ரீபரத் 
தமிழகம்

இந்தியா - பாகிஸ்தான் போர் வெற்றியின் பொன்விழா கொண்டாட்டம்; தென் பிராந்திய ராணுவம் சார்பில் தொடர் ஓட்டம்: வயது வித்தியாசமின்றி உற்சாகத்துடன் 1,000 பேர் பங்கேற்பு

செய்திப்பிரிவு

இந்தியா - பாகிஸ்தான் போரில் இந்தியா வெற்றி பெற்றதன் பொன்விழா கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக இந்திய ராணுவத்தின் தென் பிராந்திய அலுவலகம் நடத்திய தொடர் ஓட்டத்தில் வயது வித்தியாசம் இன்றி 1,000-க்கும் மேற்பட்டோர் உற்சாகமாக பங்கேற்றனர்.

இந்தியா - பாகிஸ்தான் இடையேகடந்த 1971-ம் ஆண்டு நடந்த போரில் இந்திய ராணுவம் வெற்றிபெற்றது. அதன் பொன்விழாவை, இந்த ஆண்டு முழுவதும் கொண்டாட இந்திய ராணுவத்தின் தென்பிராந்திய அலுவலகம் திட்டமிட்டுள்ளது.

அதன் ஒரு பகுதியாக ‘இளம் கதாநாயகர்களுக்கான ஓட்டம்’ என்ற கருத்திலான தொடர் ஓட்டம், சென்னை தீவுத்திடல் அருகே உள்ள சுற்றுச்சூழல் பூங்காவில் நேற்று நடைபெற்றது. இந்த தொடர்ஓட்டத்தை, இந்தியா - பாகிஸ்தான் போரில் பங்கேற்ற ராணுவவீரரான ஓய்வுபெற்ற கர்னல் ஏ.கிருஷ்ணசுவாமி, தமிழக தலைமைச் செயலர் ராஜீவ் ரஞ்சன் ஆகியோர் கொடி அசைத்தும்,மூவர்ண பலூன்களை பறக்கவிட்டும் தொடங்கிவைத்தனர்.

10 கி.மீ., 5 கி.மீ., 2 கி.மீ. என3 பிரிவாக இந்த தொடர் ஓட்டம் நடைபெற்றது. இதில் ராணுவ வீரர்கள், முன்னாள் ராணுவ அதிகாரிகள், அவர்களது குடும்பத்தினர், பள்ளி, கல்லூரி மாணவர்கள், சென்னை மாநகர போலீஸார்,பெண்கள் என 1,000-க்கும் மேற்பட்டோர் பங்கேற்று ஓடினர். 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளும் ஆர்வத்துடன் பங்கேற்று ஓடி, காண்போரை பரவசப்படுத்தினர்.

பின்னர் பல்வேறு பிரிவுகளில் வெற்றி பெற்றவர்களுக்கு தலைமைச் செயலர் ராஜீவ் ரஞ்சன்,ராணுவத்தின் தென் பிராந்திய கமாண்டிங் அதிகாரி லெஃப்டினன்ட் ஜெனரல் ஏ.அருண் ஆகியோர் ரொக்கப் பரிசுகள், பதக்கங்கள், சான்றிதழ்களை வழங்கி கவுரவித்தனர்.

விழா நடைபெற்ற பகுதியில் சென்னை ராணுவ அதிகாரிகள் பயிற்சி மையத்தின் (OTA) வாத்தியக் குழுவினர், தேசபக்திப் பாடல்களை இசைத்து,தொடர் ஓட்டத்தில் பங்கேற்றஅனைவரையும் உற்சாகப்படுத்தினர்.

இளைஞர்கள் பலரும் ‘வாழ்கஇந்தியா’ என கோஷம் எழுப்பியும், நடனம் ஆடியும் உற்சாகத்தை வெளிப்படுத்தினர். உயர் ரக இருசக்கர வாகனங்களில் வந்த இளைஞர்கள் தேசியக் கொடியுடன்,தொடர் ஓட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்களை பின்தொடர்ந்து மாநகரின் பல்வேறு பகுதிகளுக்கும் ஊர்வலமாக சென்று அவர்களைஉற்சாகப்படுத்தினர்.

விழா நடைபெற்ற வளாகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த ராணுவ துப்பாக்கிகள் உள்ளிட்டஆயுதங்கள், ராணுவ குதிரைப்படை போன்றவை பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தன.

SCROLL FOR NEXT