தமிழக அரசிடம் நிதி இல்லாதபோது காவிரி-குண்டாறு திட்டத்துக்கு எவ்வாறு நிதி ஒதுக்குவார்கள் என முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார்.
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே கீழடியில் நேற்று நடந்த காங்கிரஸ் பூத் கமிட்டி பொறுப்பாளர்கள் கூட்டத்தில் அவர் பேசியதாவது:
எப்போது முடியும்?
முதல்வராகப் பதவியேற்றபோது காவிரி-வைகை-குண்டாறு இணைப்புத் திட்டத்தை அடிக்கல் நாட்டி, தற்போது ஒரு பகுதியாவது முடித்திருந்தால் வரவேற்று இருப் பேன்.தற்போது அடிக்கல் நாட்டி எப்போது திட்டம் முடியும்.
மேலும் தமிழக அரசிடம் நிதியே இல்லாத போது இத்திட்டத்துக்கு ரூ.14 ஆயிரம் கோடிக்கும் கூடுதலாக ஒதுக்குவதாகக் கூறுகின்றனர். இத்திட்டத்துக்கு இடைக்கால பட்ஜெட்டில் எப்படி நிதி ஒதுக்குகின்றனர் என்று பார்ப்போம்.
இத்திட்டத்தை 1958-ம் ஆண்டு ரூ.189 கோடியில் காமராஜர் அறிவித்துள்ளார். மேலும் 2002-ம் ஆண்டே கருணாநிதி தொடங்கி வைத்ததாக ஸ்டாலின் கூறுகிறார்.
ஆடம்பரத் திட்டம்
டெல்லி, மும்பைக்கே எட்டுவழிச் சாலை கிடையாது. அவ்வாறுஇருக்கையில் சேலத்துக்கு எட்டுவழிச் சாலை எதற்கு?. இத்திட்டத் தால் பல நூறு விவசாயிகள் தங்கள் நிலத்தை இழந்து சிரமப்படுவர். இது தேவை இல்லாத ஆடம்பரத் திட்டம்.
மும்பை - அகமதாபாத் இடையே புல்லட் ரயில் திட்டத்தை பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார். வெறும் 600 பேர் அமர்ந்து செல்லக் கூடிய ரயிலுக்கு ஆயிரம் கோடி ரூபுாய் செலவழிப்பதா?. ஏன் 80 கி.மீ. வேகத்தில் செல்லும் ரயிலில் சென்றால் ஆகாதா? இவ்வாறு அவர் பேசினார்.