வண்டலூர் உயிரியல் பூங்காவில் மரபின கலப்பு இனப்பெருக்க முயற்சி மேற்கொண்டதில் வெள்ளைப் புலிக்கு 4 ஆரஞ்சு நிற குட்டிகள் பிறந்துள்ளன.
இது தொடர்பாக வண்டலூர் உயிரியல் பூங்கா நிர்வாகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
வண்டலூர் பூங்காவில் நம்ருதா என்ற பெண் வெள்ளைப் புலி, விஜய் என்ற ஆரஞ்சு நிற ஆண் புலியுடன் இணைந்து, தனது 2-வது ஈனில் கடந்த அக்டோபர் 16-ம் தேதி 4 ஆரஞ்சு நிற புலிக் குட்டிகளை ஈன்றுள்ளது. இவற்றில் 2 ஆண், 2 பெண் குட்டிகள் உள்ளன. இப்பூங்காவில் மரபின கலப்பு இனப்பெருக்க முயற்சியில் இது 4-வது ஈனுவாகும்.
அனைத்து நிறமி குறைபாடு காரணமாக வெள்ளைப் புலிகள் பிறக்கின்றன. இந்த குறைபாடு உள்ள புலிகளின் மரபணுக்கள், ஆபத்தை விளைவிக்கக்கூடிய ஒடுங்கு மரபு பண்புகளை கொண்டிருக்கும். இதனால் மலட்டுத் தன்மை, பார்வை கோளாறு, பால் சுரக்காமை, ஆயுட்காலம் குறைவு, தொற்று நோய் தாக்குதலுக்கு உள்ளாவது போன்ற பிரச்சினைகள் வெள்ளை புலிகளுக்கு ஏற்படும்.
அதனால் வெள்ளைப் புலிகளின் பரம்பரை மரபியல் குறைபாடுகளை சரிசெய்ய வேண்டியது அவசியமாகிறது. இதற்கான முன் முயற்சி வண்டலூர் பூங்காவில் கடந்த 2012-ல் எடுக்கப்பட்டது. அதன்படி மரபியல் ரீதியாக வலுவிழந்த பெண் வெள்ளைப் புலியையும், மரபியல் ரீதியாக வலுவான ஆரஞ்சு நிற ஆண் புலியையும் சேர்த்து இனப்பெருக்கம் செய்ய வைக்கப்பட்டது. இவ்வாறு 4 முறை முயற்சி மேற்கொள்ளப்பட்டு இதுவரை 13 ஆரஞ்சு நிற குட்டிகள் பிறந்துள்ளன. இதன் மூலம் மரபினக் கலப்பு உள்ள குட்டிகள் மரபியல் ரீதியாக வலுவானதாகவும், நோய் எதிர்ப்பு சக்தி உடைய ஓங்கு பண்புகளையும் கொண்டிருக்கும்.
தற்போது இப்பூங்காவில் 12 வெள்ளைப் புலிகள், 3 ஆரஞ்சு நிற புலிகள், 13 மரபின கலப்பு ஆரஞ்சு நிற புலிகள் என மொத்தம் 28 புலிகள் உள்ளன. தற்போது பிறந்துள்ள புலிக் குட்டிகளை சிசிடிவி கேமரா மூலம் கணினித் திரையில் பார்வையாளர்கள் பார்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.