திருப்பத்தூரில் அமமுக பிரமுகர் கொலை வழக்கில் ஏற்கெனவே 7 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், தற்போது மேலும் 3 பேரை காவல் துறையினர் நேற்று கைது செய்தனர்.
திருப்பத்தூர் கவுதம்பேட்டை பகுதியைச் சேர்ந்த அமமுக மாவட்ட மாணவரணி செயலாளர் வானவராயன் (30) கடந்த சில நாட்களுக்கு முன்பு மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்டார்.
இது குறித்து திருப்பத்தூர் நகர காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து கொலையாளிகளை தேடி வந்தனர்.
இந்நிலையில், உயிரிழந்த வானவராயனுக்கும் அதேபகுதியைச் சேர்ந்த திமுக பிரமுகர் சங்கர் என்பவருக்கும் முன்விரோதம் இருந்ததால் அவரது குடும்பத்தார் ஒன்று சேர்ந்து கூலிப்படையை ஏவி வானவராயனை கொலை செய்தது விசாரணையில் தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து, கொலைக்கு முக்கிய காரணமாக விளங்கிய சங்கர் மற்றும் அவரது குடும்பத்தைச் சேர்ந்த தனுஷ், ஆகாஷ், சவுந்தரி, ஷர்மிளா, வசந்தா மற்றும் சாந்தி ஆகிய 7 பேரை காவல் துறையினர் கைது செய்தனர்.
மேலும், இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள கூலிப்படையினரை காவல் துறையினர் தேடி வந்தனர். இந்நிலையில், பெங்களூருவில் பதுங்கியிருந்த கூலிப்படையைச் சேர்ந்த தாமஸ் (28), சூர்யா(28), திருப்பத்தூர் கவுதம்பேட்டையைச் சேர்ந்த அமரீஷ் (22) ஆகிய 3 பேரை காவல் துறையினர் நேற்று கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.