தமிழகம்

புதுவையில் மேலும் ஒரு காங்கிரஸ் எம்எல்ஏ ராஜினாமா: சட்டப்பேரவையில் நாளை பலப்பரீட்சை: நெருக்கடியில் நாராயணசாமி அரசு

செ. ஞானபிரகாஷ்

புதுச்சேரி சட்டப்பேரவையில் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் தொடர் ராஜினாமாவால் ஆளும்கட்சியும், எதிர்கட்சியும் 14 எம்.எல்.ஏக்கள் சமபலமாக இருந்த நிலையில் பெரும்பான்மையை ஆளுங்கட்சி நாளை சட்டப் பேரவையில் நிருபிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இச்சூழலில் மேலும் ஒரு காங்கிரஸ் எம்எல்ஏ இன்று தனது பதவியை ராஜினாமா செய்ததால் ஆளுங்கட்சிக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

புதுவை காங்கிரஸ் அரசுக்கு திமுக, சுயேட்சை எம்.எல்.ஏ ஆதரவோடு 19 எம்எல்ஏக்கள் பலம் இருந்தது. புதுச்சேரி காங்கிரஸ் அரசில் இருந்து 4 எம்.எல்.ஏக்கள் அடுத்தடுத்து பதவியை ராஜினாமா செய்தனர். அதோடு பாகூர் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ தனவேலு ஏற்கனவே தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இதனால், புதுச்சேரி காங்கிரஸ் அரசின் பலம் 14 எம்எல்ஏக்களாக குறைந்தது.

எதிர்கட்சிகளான என்.ஆர். காங்கிரஸ், அதிமுகவுக்கு 3 நியமன பா.ஜனதா எம்.எல்.ஏக்களோடு 14 எம்.எல்.ஏக்கள் பலம் உள்ளது.

ஆளும் கட்சிக்கும், எதிர்கட்சிக்கும் புதுவை சட்டசபையில் ஒரே எண்ணிக்கையிலான சமபலம் ஏற்பட்டது. மேலும், சட்டசபையில் மொத்தமுள்ள 28 எம்எல்ஏக்களில் 15 எம்எல்ஏக்கள் ஆதரவு இருந்தாலே பெரும்பான்மை கிடைக்கும்.

இதனால், காங்கிரஸ் அரசு பெரும்பான்மை இழந்ததாகக் கூறி தார்மீக அடிப்படையில் முதல்வர் நாராயணசாமி ராஜினாமா செய்ய எதிர்கட்சிகள் வலியுறுத்தினர். மேலும், 14 எதிர்கட்சிகள் எம்.எல்.ஏக்களும் ஒருங்கினைந்து கையெழுத்திட்டு சட்டப்பேரவையை கூட்டி காங்கிரஸ் அரசு பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என ஆளுநர் தமிழிசையிடம் மனுவும் அளித்தனர்.

இதனையடுத்து ஆளுநர் உத்தரவின் பேரில் நாளை (திங்கட்கிழமை) காலை 10 மணிக்கு புதுவை சட்டப்பேரவை கூடுகிறது. இதற்கான அதிகார பூர்வ அறிவிப்பை சட்டமன்ற செயலாளர் முனுசாமி வெளியிட்டுள்ளார். சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிருபிப்போம் என முதல்வர் நாராயணசாமி கூறினார்.

அதேநேரத்தில், ஆளும்கட்சியை சேர்ந்த மேலும் 3 எம்எல்ஏக்ககள் ராஜினாமா செய்ய இருப்பதாக எதிர்கட்சியினர் கூறியிருந்தனர். இதனால், புதுவை சட்டசபையில் நாளை நடைபெற உள்ள பலப்பரீட்சை மிகவும் எதிர்பார்ப்பை உருவாக்கியிருந்தது.

இச்சூழலில் இன்று மதியம் ராஜ்பவன் தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ லட்சுமிநாராயணன் தனது எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தார். அக்கடிதத்தை சபாநாயகர் சிவக்கொழுந்துவிடம் அவரது இல்லத்தில் அளித்துள்ளார்.

லட்சுமி நாராயணனின் ஆதரவாளர்களிடம் விசாரித்தபோது, "முதல்வரின் நாடாளுமன்ற செயலராகவும் இருந்த லட்சுமி நாராயணன் ஏற்கெனவே காங்கிரஸ் கட்சி மீது அதிருப்தியில் இருந்தார். சபாநாயகர் பதவியில் இருந்து வைத்திலிங்கம் ராஜினாமா செய்துவிட்டு எம்பி தேர்தலில் போட்டியிட்டு வென்றதால் அப்பதவி தனக்கு கிடைக்கும் என்று எம்எல்ஏக்களில் மூத்தவராக இருந்த லட்சுமி நாராயணன் எதிர்பார்த்திருந்தார்.

ஆனால் சிவக்கொழுந்துவுக்கு அப்பதவி தந்ததால் அதிருப்தியுடன் இருந்து வந்தார். பின்னர் முதல்வர் சமாதானம் செய்ததால் கட்சியில் நீடித்து வந்தார். வரும் தேர்தலில் ராஜ்பவன் தொகுதி தொகுதி பங்கீட்டில் திமுகவுக்கு ஒதுக்க முடிவு எடுத்துள்ளதால் எம்எல்ஏ பதவியிலிருந்து லட்சுமி நாராயணன் விலகியுள்ளார்" என்று குறிப்பிட்டனர்.

இதையடுத்து காங்கிரஸ் எம்எல்ஏக்களின் பலம் 9 ஆக சரிந்துள்ளது. இதன் மூலம் எதிர்க்கட்சி எம்எல்ஏக்களை விட ஆளுங்கட்சி எம்.எல்.ஏக்களின் எண்ணிக்கை குறைந்துள்ளதால் கடும் நெருக்கடி ஆளுங்கட்சிக்கு ஏற்பட்டுள்ளது. தற்போது ஆளும்கட்சியில் 13 எம்எல்ஏக்களும், எதிர்க்கட்சியில் 14 எம்.எல்.ஏக்களும் உள்ளனர்.

SCROLL FOR NEXT