காரைக்குடி நகராட்சியில் 2017-ம் ஆண்டு குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் ரூ. 112.5 கோடியில் பாதாள சாக்கடைத் திட்டப் பணிகள் தொடங்கின. இதில் 36 வார்டுகளிலும் 155 கி.மீ.க்கு குழாய்களை பதித்து, 5,559 ஆள் நுழைவுத் தொட்டிகள் (மேன்ஹோல்) அமைக்கப்பட வேண்டும்.
இப்பணி 2020-ம் ஆண்டு மார்ச்சில் முடிந்திருக்க வேண்டும். ஆனால், இதுவரை பாதியளவு பணிகள் கூட முடியவில்லை. மேலும் சாலை நடுவே ஆங்காங்கே தோண்டப்பட்ட பள்ளங்கள் கூட மூடப்படாமல் உள்ளன. இந்நிலையில் தேவகேட்டை ரஸ்தா பகுதியில் குடிகாத்தான் கண்மாய் அருகே பாதாளச் சாக்கடைக்காகக் குழி தோண்டும் பணி நடந்து வருகிறது.
குறுகிய இடமாக உள்ள இப்பகுதியில் தகுந்த பாதுகாப்பு இல்லாமல் பணிகள் நடந்து வருகின்றன. மேலும் தற்போது சாலையின் இருபுறமும் கண்மாயில் நீர் நிரம்பி இருப்பதால் பாதாளச் சாக்கடைக்காக தோண்டப்பட்ட குழியில் தண்ணீர் புகுந்துள்ளது. இதனால் பணிகளை முடிப்பதிலும் தொய்வு ஏற்பட்டு, அவ்வழியாகச் செல்வோர் சிரமப்பட்டு வருகின்றனர்.
இதுகுறித்து காரைக்குடி சமூக ஆர்வலர் தமிழகார்த்திக் கூறியதாவது:
முறையாகத் திட்டமிடல் இல்லாமல் நடக்கும் பாதாள சாக்கடைப் பணியால்தான் இத்திட்டத்தை குறித்த காலத்தில் முடிக்க முடியவில்லை. கண்மாயில் தண்ணீர் நிரம்பியிருக்கும் இக்காலக்கட்டத்தில் குழியைத் தோண்டுகின்றனர். இதனால் குழி முழுவதும் தண்ணீர் நிரம்பி பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.
ஏற்கெனவே பாதுகாப்பில்லாத பாதாளச் சாக்கடைப் பணியால் பலர் விபத்துக்குள்ளாகி உள்ளனர். இந் நிலையில், குறுகிய இடமான இந்தப் பகுதியிலும் எந்தவித பாதுகாப்பு நடவடிக்கையும் இல்லாமல் பணியைச் செய்து வருகின்றனர். இதனால் இரவு நேரங்களில் விபத்து ஏற்பட வாய்ப் புள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.